கோலாலம்பூர்: இளையர்களை ஈர்க்கும் வகையில், கட்டணமில்லாக் கல்வி, மூவாண்டுப் பட்டப்படிப்புகள், கலப்புமுறைக் கற்றல் போன்ற வழிகளில் உயர்கல்விப் பாதையை எளிதாக்க மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, மருத்துவம், பல்மருத்துவம், மருந்தாக்கவியல் ஆகிய படிப்புகளுக்கு உபகாரச் சம்பளம் வழங்குவதை நிறுத்த பொதுச் சேவைத் துறை முடிவெடுத்திருந்தது. இந்நிலையில், பிரதமர் அன்வார் அம்முடிவை நிறுத்திவைத்துள்ளார். அத்துடன், இப்போது உபகாரச் சம்பளம் பெறுவோர்க்கான படித்தொகையையும் ஜூலை முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
“இதனால் அரசாங்கத்திற்கு ஆறு மாதகாலத்திற்குக் கூடுதலாக 52.03 மில்லியன் ரிங்கிட் (S$15 மில்லியன்) செலவாகும்; 43,595 பேர் பயனடைவர்,” என்று திரு அன்வார் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கூறியிருந்தார்.
இவ்வாண்டு ஜூலையில் மலேசியாவின் ஆறு மாநிலங்களுக்குத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பணக்காரர்கள் தவிர்த்து மற்ற அனைவர்க்கும் உயர்கல்வி இலவசமாகக் கிட்ட வேண்டும் என்ற அவர், ஆயினும் அத்தகையதொரு கொள்கையை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவை என்றும் சொன்னார்.
மலேசிய தேசியப் பல்கலைக்கழக மாணவர்களிடம் உரையாற்றியபோது திரு அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.
இம்மாதம் 4ஆம் தேதி மலேசிய உயர்கல்வி அமைச்சு மேலும் பல மாற்றங்களை அறிவித்தது. சில பல்கலைக்கழகங்களில் கலப்புமுறைக் கற்றலுக்கு மாறுவதும் அவற்றில் ஒன்று. அதன்படி, பட்டக்கல்வி மாணவர்கள் முதலாமாண்டிலும் இறுதியாண்டிலும் நேரில் வகுப்புகளுக்கு வரவேண்டும். இரண்டாம் ஆண்டில் அவர்கள் வீட்டிலிருந்தும் படிக்க அனுமதிக்கப்படுவர்.
ஒன்பது அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் குறைந்தது 44 பாடப்பிரிவுகள் நாலாண்டுகளில் இருந்து மூவாண்டுப் படிப்புகளாகக் குறைக்கப்படும். இதன்மூலம் பட்டதாரிகள் முன்கூட்டியே ஊழியரணியில் நுழைய முடியும் என்று உயர்கல்வி அமைச்சர் காலித் நோர்டின் குறிப்பிட்டார்.

