இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, ஜப்பான் பேரரசர் நரு ஹிட்டோவை மேற்கு ஜாவாவில் உள்ள போகோர் அதிபர் மாளிகையில் சந்தித்தார். இரு நாடுகளும் உறவை பலப்படுத்திக்கொள்ளும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜப்பானிய பேரரசரும் அவரின் துணைவியாரும் இந்தோனீசியாவுக்கு ஒரு வாரம் வருகை அளித்துள்ளனர். ஜப்பானிய பேரரசர் 2019ல் அரியணை ஏறினார்.
அதற்குப் பிறகு அவர் இப்போது தான் இந்தோனீசியாவுக்கு முதல் அதிகாரபூர்வ வருகை அளித்துள்ளார். இந்தோனீசியாவுக்கு வரும்படி ஜப்பானிய பேரரசரை அதிபர் 2002 ஜூலையில் கேட்டுக்கொண்டார்.
“பேரரசரின் வருகை இருநாட்டு தோழமை உறவு வலுவடைவதற்கு அறிகுறியாக இருக்கிறது. ஆகையால் இந்த வருகை தமக்குப் பெருமையாக இருக்கிறது,” என்று அதிபர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையில் எதிர்காலத்தில் உத்திபூர்வ பங்கா ளித்துவ உறவு பலமடைய, குறிப்பாக பொருளியல் துறையில் உறவு வலுவடைய இத்தகைய ஓர் அடிப்படை அவசியம் என்று நேற்று செய்தியாளர்களுக்கு நேரடியாக விடுத்த அறிக்கையில் அதிபர் தெரிவித்தார்.
சவால் மிக்க இப்போதைய உலகச் சூழலில் இருநாடுகளுக்கு இடையிலும் இருநாடுகளின் மக்களுக்கு இடையிலும் தோழமை உறவு தொடர்ந்து பேணி பலப்படுத்தப்பட வேண்டும் என்றார் அதிபர்.
இந்தோனீசிய வருகை தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் மனமுவந்து வரவேற்பு அளித்த அதிபருக்குத் தான் நன்றி கூறுவதாகவும் பேரரசர் குறிப்பிட்டார்.
பேரரசரும் மகாராணியாரும் நேற்று தென் ஜகார்த்தாவில் உள்ள எம்ஆர்டி ரயில் நிலையம் சென்றனர். ஜப்பானியர் பலரும் அவர்களை வரவேற்றனர்.