தென்கொரியாவிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த ஸ்கூட் விமானம் ஒன்று திங்கட்கிழமை காலை தைப்பேயில் தரையிறங்கியபோது அதன் இடது பக்கத்தில் உள்ள சக்கரத்தைக் காணவில்லை.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கூட்டின் டிஆர்897 விமானம் திங்கட்கிழமை நள்ளிரவு 12.06 மணிக்கு தைவானின் தவ்யுவென் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியபோது சக்கரம் விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த விமானத்திலிருந்து இடது சக்கரம் காணாமல்போயிருப்பதை இணையப் படங்கள் காட்டின. அந்த போயிங் 787 ரக டிரீம்லைனர் விமானத்துக்கு முன்புறத்தில் இரண்டு சக்கரங்கள் இருக்கவேண்டும். முன்சக்கரங்கள் விமானம் தரையில் செல்வதற்கும், விமானம் புறப்படும்போதும் தரையிறங்கும்போதும் திசைக் கட்டுப்பாட்டை நிலையாக வைத்திருப்பதற்கும் உதவுகின்றன.
விமானம் தைப்பேயில் தரையிறங்கியபோது தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதாக ஸ்கூட் பேச்சாளர் ஒருவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது கூறினார்.
அந்த விமானம் திங்கட்கிழமை பின்னிரவு 1.30 மணிக்குத் தைப்பேயிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்படவிருந்தது. ஆனால் விமானச் சேவை பின்னர் ரத்துசெய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
எஞ்சியிருக்கும் மற்ற பயணிகளைக் கொண்டுசெல்ல, அதே நாளன்று இரவு 8.45 மணிக்குத் தைப்பேயிலிருந்து மற்றொரு விமானச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த விமானம் திங்கட்கிழமை காலை 5.55 மணிக்கு சாங்கி விமான நிலையம் சென்றுசேர்ந்திருக்க வேண்டும் என்று அதன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், இப்போது அது செவ்வாய்க்கிழமை பின்னிரவு 1.35 மணிக்கு சிங்கப்பூர் வந்துசேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்ட ஸ்கூட் பேச்சாளர், தங்குமிட வசதிகளுக்கும், தகுதிபெறும் பயணிகளுக்கு விமானத்துக்குச் செலுத்தப்பட்ட கட்டணங்களைத் திரும்பக் கொடுப்பதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பயணிகள், விமானப் பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பே தங்களின் முன்னுரிமையாக இருப்பதாகவும், தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தொடர்ந்து உதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.