நியூயார்க்: பயங்கரவாதத்துக்கு இட்டுச் செல்லக்கூடிய வறுமை போன்ற சூழல்களை நாடுகள் கையாளவேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் உலகம் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைக் கண்டுள்ளபோதும், பயங்கரவாதமும் வன்முறையுடன் கூடிய தீவிரவாதமும் தொடர்ந்து அதிகரித்துவருவதாக நியூயார்க்கில் திங்கட்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் தெரிவித்தார்.
இந்த உலக மிரட்டலுக்கு எதிராக ஒன்றிணைந்து இருக்குமாறு அவர் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.
அல் காய்தா, தேஷ் இயக்கங்களின் ஆப்பிரிக்கத் துணை அமைப்புகள் ‘சஹேல்’ போன்ற பகுதிகளை மிக விரைவாகக் கைப்பற்றி வருகின்றன. அவை கினி வளைகுடாவை நோக்கிச் செல்வதாகக் கூறிய திரு குட்டரஸ், சிரியாவிலும் ஈராக்கிலும் ஐஎஸ் இயக்கம் இழைக்கும் கொடுமைகளையும் சுட்டிக்காட்டினார்.
உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு நெருக்கடிச் சூழல்களைத் தீவிரவாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாக திரு குட்டரஸ் குறிப்பிட்டார். உணவு, எரிசக்தி நெருக்கடிகள், பருவநிலை மாற்றம், இணையத்தில் வெறுப்புணர்வைப் பரப்புதல் போன்றவையே அவை. இந்த ஆபத்தான நிலையை முடிவுக்குக் கொண்டுவர, ‘தடுப்பு’ எனும் மிகச் சிறந்த பயன்மிக்க அணுகுமுறையில் நாம் கவனம் செலுத்தவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
‘தடுப்பு’ என்பது தாக்குதல்களையும் திட்டங்களையும் முறியடிப்பதற்கும் அப்பாற்பட்டது என்றார் திரு குட்டரஸ். அது பயங்கரவாதத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய வறுமை, பாகுபாடு, வலுவற்ற உள்கட்டமைப்பு, மனித உரிமை மீறல்கள் போன்ற சூழல்களைச் கையாள்வதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.