நியூஃபவுண்ட்லேண்ட்: டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் உள்ள வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் ஐவர் இருந்த நீர்மூழ்கிக் கப்பல் ஞாயிற்றுக்கிழமையன்று காணாமற்போனது.
அந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஐவர் இருந்தனர்.
கப்பலில் இருந்த ஐவரில் பிரிட்டனைச் சேர்ந்த 58 வயது ஹமீஷ் ஹார்டிங் எனும் விமானத் துறைத் தொழிலதிபரும் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆக்ஷன் ஏவியேஷன் நிறுவனத்தைத் தொடங்கிய இவர், அபாயகரமான சாகசங்களைப் புரிவதில் மூன்று முறை கின்னஸ் சாதனை படைத்தவர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷாஹ்ஸாடா தாவுத், அவரின் மகன் ஆபிரெஞ்சு கடற்படைத் தளபதி பால் ஹென்ரி நார்கியோலெ ஆகியோரும் கப்பலில் இருந்ததாக நம்பப்படுகிறது.
காணாமற்போன நீர்மூழ்கிக் கப்பலை ஓஷன்கேட் எக்ஸ்படிஷன்ஸ் நிறுவனம் நிர்வகிக்கிறது.
மூழ்கிப்போன கப்பல்களின் சிதைவுகளைக் காண்பதற்கான சுற்றுலாக்கள் போன்றவற்றை அந்நிறுவனம் வழங்குகிறது.
ஓஷன்கேட் எக்ஸ்படிஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான திரு ஸ்டாக்டன் ரஷ்ஷும் கப்பலில் இருந்ததாக அஞ்சப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கப்பலைத் தேடும் பணிகளில் அமெரிக்க கரையோரக் காவல்படை ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் மெசச்சூசட்ஸ் மாநிலத்தில் கேப் காட் பகுதிக்கு சுமார் 1,450 கிலோமீட்டருக்கு அப்பால் நீருக்குள் சென்றுகொண்டிருந்தபோது நீர்மூழ்கிக் கப்பலுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டதாக ‘எம்வி போலார்’ எனும் ஆய்வுக் கப்பல் தெரிவித்தது.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை தொடர்பு துண்டிக்கப்பட்டது.
நெருக்கடி ஏற்பட்டால் கப்பலில் இருப்பவர்களுக்கு 96 மணிநேரத்துக்குத் தேவையான பிராணவாயு மட்டுமே அதில் இருக்கும்.
பிராணவாயு அளவு தொடர்ந்து குறையும் என்றும் குறிப்பிடப்பட்டது.
அதைக் கருத்தில்கொண்டு மீட்புப் பணியாளர்கள் நேரத்தை வீணாக்காமல் தேடல் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க கரையோரக் காவல்படை அதிகாரியான ரியர் அட்மிரல் ஜான் மாவ்கர் கூறினார்.