வாஷிங்டன்: அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்கள் தொடர்பான வழக்கில் உள்ள ஆதாரங்கள் பொதுமக்களுக்கோ ஊடகங்களுக்கோ வெளியிடப்படக்கூடாது என்று முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தற்காப்பு வழக்கறிஞர்களுக்கு ஃபுளோரிடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க நீதிபதி புரூஸ் ரேன்ஹார்ட் பிறப்பித்த அந்த உத்தரவில், டிரம்ப் அந்த ஆவணங்களைப் பெறுவதன் தொடர்பில் கடுமையான நிபந்தனைகளும் அடங்கியிருந்தன.
தற்காப்புத் தரப்பு எவ்வாறு ஆவணங்களை வைத்துக்கொள்ளலாம் என்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் நிபந்தனைகள் போடும்படி கடந்த வாரம் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். இதற்கிடையே, ஜூன் மாதத் தொடக்கத்தில் அவர்மீது கூட்டரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பிறகு, அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்களைச் சட்டவிரோதமாக வைத்துக்கொண்டு, பின்னர் அந்த விவகாரத்தின் தொடர்பில் நடத்தப்பட்ட அரசாங்க விசாரணைக்கு இடையூறு விளைவிக்க திட்டம் தீட்டியதாக டிரம்ப்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால், தம்மீதான 37 குற்றச்சாட்டுகளையும் டிரம்ப் மறுத்து வருகிறார்.

