கியவ்: இருவார காலமாக தான் நடத்திய பதில் தாக்குதலில் எட்டாவது கிராமத்தில் இருந்து ரஷ்யப் படைகளைத் தான் வெளியேற்றியுள்ளதாக உக்ரேன் திங்கட்கிழமை கூறியது.
ரஷ்யப் படைகளின் எதிர்ப்பு வலுவாக இருந்தாலும் உக்ரேனின் ஆகப்பெரிய தாக்குதல் காத்திருப்பதாக தற்காப்பு அதிகாரி ஒருவர் சூளுரைத்துள்ளார்.
உக்ரேனியப் படைகள் பியாட்டிகாட்கி கிராமத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக துணைத் தற்காப்பு அமைச்சர் ஹன்னா மாலியார் கூறினார்.
கியவ்வின் ராணுவம் சில இடங்களில் முன்னோக்கிச் சென்றதாகவும் மற்ற இடங்களில் தீவிர தாக்குதல்களுக்கு எதிராக தற்காத்து வருவதாகவும் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தம் காணொளி உரையில் தெரிவித்தார். எனினும், நிலவரம் உக்ரேனுக்குச் சாதகமாக இருப்பதாக அவர் சொன்னார்.
கடந்த 24 மணி நேரத்தில் நான்கு ஆளில்லா வானூர்திகளும் நான்கு தொலைதூர ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரேனிய ஆயுதப் படை ராணுவ ஊழியர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
இதற்கிடையே, ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்த ஆயுதங்களைப் பெறுவதற்கு மேற்கத்திய நட்பு நாடுகளுடன் தாம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக திரு ஸெலென்ஸ்கி கூறினார். உக்ரேனின் தாக்குதல் வேட்டையை தான் முறியடித்துள்ளதாக ரஷ்யா குறிப்பிட்டது.
உக்ரேன்-ரஷ்யா போரில் ஆயிரக்கணக்கான குடிமக்கள் கொல்லப்பட்டனர். பல முக்கிய நகர்கள் பலத்த சேதமுற்றதுடன் மில்லியன் கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்தப் போர் காரணமாக உலகளவில் பணவீக்கம் மோசமடைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைப் புரட்டிப் போட்டுள்ளது.

