கனமழையுடன் புயல் காற்று வீசி, பள்ளி ஒன்றின் கூரை பறந்து ஒரு வீட்டின் மீது விழுந்ததில் அவ்வீட்டில் இருந்த 55 வயது இந்திய மாது உயிரிழந்தார். மலேசியாவின் ஜோகூரில் உள்ள செகமாட் மாவட்டத்தில் ஜூன் 20ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது.
பள்ளிக்கு அருகில் திருவாட்டி வி.மகாதேவியின் வீடு அமைந்திருந்ததாகவும் கூரை அவர் வீட்டுச் சமையலறைப் பகுதிமேல் விழுந்ததில் திருவாட்டி மகாதேவி அதில் சிக்கி உயிரிழந்ததாகவும் அறியப்படுகிறது. சம்பவம் குறித்து அவசர அழைப்பு வந்ததும் செகமாட் தீயணைப்பு, மீட்புத் துறை அதிகாரிகள் ஐவர் உடனே சம்பவ இடத்துக்கு இரவு 7.41க்குச் சென்றனர்.
இடிபாடுகளிலிருந்து திருவாட்டி மகாதேவியின் உடலை அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் மீட்க உதவினர். இருப்பினும் மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திலேயே திருவாட்டி மகாதேவி உயிரிழந்ததை உறுதிசெய்தார்.
திருவாட்டி மகாதேவிக்கு நேர்ந்த நிலையால் அவரின் குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பலத்த நொறுங்கும் சத்தம் கேட்டதை அடுத்து திருவாட்டி மகாதேவியின் கணவர் திரு பி.சரவணனுக்குச் சமையலறைப் பகுதியிலிருந்து அலறல் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
பள்ளி உணவகத்தில் வேலைபார்க்கும் தமது மனைவி, ஒரு பெரிய கூரையின் கீழ் சிக்கியிருப்பதை அவர் பார்த்து அதிர்ச்சியுற்றார். உடனே, அண்டைவீட்டாரின் உதவியை 57 வயது திரு சரவணன் நாடினார்.
கனத்த மழையால் சவால்மிக்க சூழல் ஏற்பட்ட நிலையிலும் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த திருவாட்டி மகாதேவியை மீட்க அண்டைவீட்டார் முயன்றனர்.
இதையடுத்து புயல்மழையால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 40 குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.