இரண்டு வயது மகன் சுட்டதால் கர்ப்பிணி தாய் மாண்டார்

இரண்டு வயது மகன் சுட்டதால் கர்ப்பிணி தாய் மாண்டார்

1 mins read
ad07091f-fef2-450b-87bf-8daa2a5a2504
இரண்டு வயதுச் சிறுவனுக்கு எவ்வாறு துப்பாக்கியை இயக்கத் தெரிந்தது என்பது குறித்துக் காவல்துறை விசாரித்து வருகிறது. - படம்: இணையம்

ஒகையோ: அமெரிக்க மாநிலமான ஒகையோவில் இந்த மாதத் தொடக்கத்தில் இரண்டு வயது மகன் தெரியாமல் துப்பாக்கியால் சுட்டதால் கர்ப்பிணித் தாயும் அவருடைய வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தனர்.

இம்மாதம் 16ஆம் தேதி திருவாட்டி லோரா இல்க் காவல்துறையினரைத் தொலைபேசி மூலம் அழைத்தார். தனது மகன் துப்பாக்கியைக் கொண்டு தன்னை முதுகில் சுட்டதாக அவர் காவல்துறையிடம் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகம் கூறியது.

அதிகாரிகள் கதவை உதைத்து அவரின் வீட்டிற்குள் சென்றனர். திருவாட்டி இல்க்கையும் அவரது மகனையும் அறையில் கண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு அருகில் 9 மில்லிமீட்டர் வகை கைத்துப்பாக்கி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

துணிகளைச் சலவை செய்துகொண்டிருந்தபோது தம் மகன் துப்பாக்கி எடுத்ததைத் தான் கவனிக்கவில்லை என்றார் திருவாட்டி இல்க்.

அவர் அதிக வலியில் இருந்ததாகக் காவல்துறைத் தலைவர் டேவிட் ஸ்மித் கூறினார்.

திருவாட்டி இல்க், ஃபிஷர் டைட்டஸ் மருத்துவ நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். அவருடைய வயிற்றில் இருந்த குழந்தை சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மாண்டது. பின்னர் அதே நாளன்று அவரும் உயிரிழந்தார்.

இரண்டு வயதுச் சிறுவனுக்கு எவ்வாறு துப்பாக்கியைக் கையாளத் தெரிந்தது என்பதன் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்