மியன்மார் ராணுவ ஆட்சிமன்றத்துக்கு கிடைத்துவரும் நிதி ஆதரவை துண்டிக்கும் நோக்கில் அந்நாட்டின் அரசு வங்கிகள் மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக இதுகுறித்து விவரமறிந்த வட்டாரங்கள் தாய்லாந்து ஊடக நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, அமெரிக்கா மிக விரைவில் மியன்மாரின் ஃபாரின் டிரேட் வங்கி மீதும் மியன்மார் இன்வெஸ்ட்மண்ட் அண்ட் கமர்ஷியல் வங்கி மீதும் தடைகளை அறிவிக்கப்படும் என்று ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
இதுகுறித்து கருத்துரைத்த தாய்லாந்திலுள்ள அமெரிக்க தூதரகம், மியன்மாரில் ஏற்பட்ட புரட்சி, அதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறை ஆகியவற்றுக்கு மியன்மாரைப் பொறுப்பேற்க அனைத்து வழிகளிலும் ஆராயப்படுவதாக தெரிவித்தது.
இதில் மியன்மார் அரசுக்கு கிடைத்துவரும் நிதி ஆதரவை முடக்கும் முயற்சிகளும் அடங்கும் என்று விளக்கியது.
“இதன்மூலம் மியன்மார் அரசு பெறக்கூடிய அமெரிக்க டாலர்களை தடுப்பதுடன் புரட்சி, அதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறை, தொடர்ந்து நடைபெற்றுவரும் மிகக் கொடூரமான வன்முறைச் சம்பவங்கள் ஆகியவற்றுக்கு காரணமானவர்களை பொறுப்பேற்க வைப்பது,” என்று அமெரிக்க தூதரகம் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியது.
மியன்மார் ராணுவ ஆட்சியாளர்கள் கடந்த 2021ஆம் ஆண்டு நிகழ்ந்த புரட்சியில் ஆங் சான் சூச்சியின் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கைப்பற்றி அதைத் தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. அப்பொழுதிருந்தே அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய நாடுகளும் பல அடுக்கு தடைகளை விதித்துள்ளன.
இதுபற்றிக் கூறிய மியன்மார் ராணுவ ஆட்சிமன்றப் பேச்சாளர் ஒருவர் புதிய தடைகள் குறித்து தமது நாடு கவலைப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதுபோன்ற தடைகளை மியன்மார் ஏற்கெனவே சந்தித்துள்ளதாக எம்டபிய்யூடி ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில் மேஜர் ஜெனரல் ஸா மின் டுன் கூறினார். அதனால் புதிய தடைகளால் எவ்வித இழப்பும் தமது நாட்டுக்கு ஏற்படாது என்று அவர் விளக்கினார்.


