மிகமுக்கிய, புதிய தொழில்நுட்பங்கள் குறித்த இருதரப்புக் கலந்துரையாடலை நடத்துவதற்கு சிங்கப்பூரும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருவதாக இரு நாடுகளும் கூறியுள்ளன.
சிங்கப்பூரும் அமெரிக்காவும் அவற்றின் வழக்கமான பொருளியல், பாதுகாப்பு இணைப்புகளைத் தாண்டி ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வதற்கு இந்தக் கலந்துரையாடல் ஒரு வழி என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.
அவர் செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனைச் சந்தித்தார்.
இருநாட்டு உறவும் உன்னத நிலையில் இருப்பதாக டாக்டர் விவியன் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட ஒரு வாரப் பயணத்தின் இறுதியில் கூறினார்.
“இந்த வழக்கமான தூண்களைத் தாண்டி, புதிய அம்சங்களைப் பற்றியும் ஆராய்ந்துள்ளோம்,” என்று சிங்கப்பூர் ஊடகங்களைச் சந்தித்தபோது அவர் தெரிவித்தார். பருவநிலை மாற்றம், இணையப் பாதுகாப்பு, விண்வெளி ஒத்துழைப்பு போன்றவற்றை அவர் மேற்கோள் காட்டினார்.
கலந்துரையாடலில் எத்தகைய தொழில்நுட்பம் பற்றிப் பேசப்படும் என்பது குறித்து இருநாடுகளும் விரிவாகக் கூறவில்லை என்றபோதும், அவை அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த மேம்பட்ட தொழில்நுட்பங்கள் என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.
வெளிப்படையான, பரிமாறிக்கொள்ளக்கூடிய பாதுகாப்பான தொழில்நுட்ப முறைக்கான முக்கியத்துவத்தில் இருதரப்பும் நம்பிக்கை கொண்டுள்ளதாக டாக்டர் விவியனும் திரு சல்லிவனும் தெரிவித்தனர்.
முன்னதாக, டாக்டர் விவியன் வேறு பல அமெரிக்க நாடாளுமன்றத் தலைவர்களையும் உயர்நிலை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார்.