கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் திரு நஜிப் ரசாக்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல், பணமோசடி வழக்கில் 45வது சாட்சியான ‘செமராக் கன்சார்ட்டியம் சத்து’ நிறுவனத்தின் நிர்வாகி உமர் முஸ்தபா கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை சாட்சியம் அளித்தார்.
“திரு நஜிப்பிடம் இருந்து கிட்டதட்ட 23மில்லியன் ரிங்கிட்டை( S$6.7 மில்லியன்) ஊடக ஆலோசனை சேவை வழங்கியதற்கு கட்டணாகப் பெற்றோம். இந்த சேவையை நாங்கள் அவருக்கு 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதியிலிருந்து 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி வழங்கினோம். இதற்கான கட்டணத்தை அவர் 39 காசோலைகள் மூலம் வழங்கினார்,” என்று திரு உமர் வாக்குமூலம் அளித்தார்.
மேலும், அவர் அந்த நிதிக்கான ஆதாரத்தை தம்மால் அடையாளம் காண முடியவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
திரு நஜிப்பிற்கு ஆங்கில உரை எழுதிக் கொடுப்பது, மலேசியாவில் செயல்படும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அவர் அளிக்கும் அனைத்துத் தகவல்களையும் ஒருங்கிணைத்து வழங்குவது, அவரது வெளிநாட்டுப் பயணங்களின்போது அனைத்துலக ஊடகங்களில் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்வது போன்ற சேவைகளை அந்நிறுவனம் வழங்கியதாகக் கூறப்பட்டது.