தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இந்தோனீசியா தொடர் விடுமுறை அறிவிப்பு

1 mins read
eebe0bad-99d6-46b8-bc89-b2818facd095
இம்மாதம் 29ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு 28, 30ஆம் தேதிகளையும் விடுமுறை நாள்களாக இந்தோனீசியா அதிபர் அறிவித்துள்ளார். - படம்: ஏஎஃப்பி

 ஜகார்த்தா: இம்மாதம் 29ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள் வருவதை முன்னிட்டு ஜூன் 28, 30ஆம் தேதிகளையும் விடுமுறை நாள்களாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ புதன்கிழமை அறிவித்தார்.

இது இந்தோனீசியர்களுக்கு ஒரு நீண்ட மாத இறுதி விடுமுறையாக இருக்கும். அவர்கள் நெடுந்தூரப் பயணம் மேற்கொள்வதற்கு வசதியாகவும் இருக்கும்.

இந்த விடுமுறை நாள்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் பொருந்தும். இந்த நாள்களில் இந்தோனீசியப் பங்குச்சந்தை இயங்காது.

“இந்த நீண்ட விடுமுறை, வட்டார, உள்ளூர் சுற்றுலாப் பகுதிகளின் பொருளியலை உயர்த்த ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்,” என்று அதிபர் ஜோக்கோவி கூறினார்.

பயனீட்டாளர்கள் செலவிடுவதை ஊக்குவிக்க இப்படி வழக்கத்திற்கு மாறான வழிமுறைகளை அவர் கையாள்வது இது முதல்முறையன்று.

கொவிட்-19 பெருந்தொற்றின்போது விதிக்கப்பட்ட தடைகளை அரசாங்கம் தளர்த்திய பிறகு, மக்கள் அதிகமாக வெளியே செல்வதற்காக பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கும்படி உள்ளூர் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மேலும், பெருந்தொற்றுக் காலத்தில் இந்தோனீசியர்களை இணையம் வழியாகப் பொருள்களை வாங்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்