மாஸ்கோ: ரஷ்யாவில் கைதுசெய்யப்பட்டுள்ள அமெரிக்கச் செய்தியாளரைச் சந்திக்க நியூயார்க் அனுமதி கேட்டுள்ளதாக ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்கி ரிப்கோவ் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் ‘வால் ஸ்திரீட் ஜர்னல்’ பத்திரிகையில் பணிபுரியும் இவான் ஜெர்ஷ்கோவிச் உளவு பார்த்ததாகச் சந்தேகத்தின்பேரில் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஜெர்ஷ்கோவிச் மறுத்துள்ளார். அவர்மீது வியாழக்கிழமை விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கக் குடிமகனான ஜெர்ஷ்கோவிச் ரஷ்ய ராணுவத்தின் ரகசிய தகவல்களைச் சேகரித்ததாக கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
ஜெர்ஷ்கோவிச் முதலில் மே 29ஆம் தேதி வரை விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டார் ஆனால், ரஷ்ய நீதிமன்றம் அவரின் தடுப்புக்காவலை ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
ஜெர்ஷ்கோவிச் தவறாகக் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.


