தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரிங்கிட் பலவீனம்: இறக்குமதிப் பொருள்களுக்கு பதிலாக உள்ளூர் பொருள்களை நாடும் மலேசியர்கள்

2 mins read
051f3f05-ccae-4e7b-b2cb-6aa633b40cb0
கடந்த ஓராண்டு காலத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 5.5% மதிப்பு குறைந்து இருக்கிறது.  - கோப்புப்படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

மலேசியர்கள், இறக்குமதியாகும் பயனீட்டுப் பொருள்களைக் குறைத்துக்கொண்டு மலிவான உள்ளூர் தயாரிப்புப் பொருள்களை நாடுகிறார்கள்.

மலேசிய நாணயமான ரிங்கிட் மதிப்பு பலவீனமாக இருப்பதே இதற்கான காரணம். கடந்த ஓராண்டு காலத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 5.5% மதிப்பு குறைந்து இருக்கிறது. வியாழக்கிழமை ஒரு டாலருக்கு 4.6450 ரிங்கிட் என்ற நிலையில் வர்த்தகம் நடந்தது.

ரிங்கிட் நாணய மதிப்பு கடந்த 12 மாதங்களில் ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. ரிங்கிட் மதிப்பு குறைவதால் இறக்குமதியாகும் பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தேவை குறைந்துள்ளது.

மலேசியாவின் பயனீட்டாளர் இறக்குமதி வளர்ச்சி இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மெதுவடைந்துவிட்டது. ஆண்டுக்காண்டு அடிப்படையில் அது சராசரியாக 1.1% வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த வளர்ச்சி, சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 20.1% ஆக இருந்தது என்று மேபேங்க் தலைமைப் பொருளியல் வல்லுநர் சுகாய்மி இலியாஸ் தெரிவித்தார்.

பணவீக்கம், வட்டி விகிதச் சூழ்நிலை, பலவீனமான ரிங்கிட் ஆகியவை காரணமாக இந்த ஆண்டின் எஞ்சிய காலத்திற்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்குள் இறக்குமதியாகக்கூடிய பயனீட்டுப் பொருள்கள் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மலேசியா இறக்குமதி செய்யும் பயனீட்டுப் பொருள்களில் சுமார் 45 விழுக்காடு உணவு, பானப் பொருள்கள் என்றும் ஜவுளி, கார், காலணி, அறைகலன்கள், கட்டட அலங்காரப் பொருள்கள் முதலானவை இறக்குமதியாகும் இதர பொருள்களில் அடங்கும் என்றும் திரு இலியாஸ் குறிப்பிட்டார்.

நிறுவனங்களும் நிலவரங்களை உணர்ந்துகொண்டு இறக்குமதிகளைக் குறைப்பதாக அவர் கூறினார்.

ரிங்கிட் பலவீனமாக இருப்பதால் இந்த ஆண்டு பயனீட்டாளர்கள் செலவீன அதிகரிப்பு பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அதிகரிப்பு, வருடாந்திர வளர்ச்சியான 7% ஐவிட குறையும் என்று பேங்க் முவாமலாட் மலேசியாவின் தலைமைப் பொருளியல் வல்லுநர் முகம்மது அப்ஸானிஸாம் அப்துல் ரஷித் கூறினார்.

இறக்குமதியாகக்கூடிய பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சில நிறுவனங்கள் மலிவான உள்ளூர் பொருள்களை மாற்றாக விற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, மலேசிய சாலைப் போக்கு வரத்துத் துறையின் புள்ளிவிவரங்களைப் பார்க்கையில், மலேசிய மக்கள் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் உள்ளூர் கார்களை அதிகம் வாங்கி இருக்கிறார்கள் என்பது தெரியவருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு இருக்கிறது.

அதே காலகட்டத்தில் இறக்குமதியாகும் பிரபல கார்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித உயர்வை நிறுத்தி வைக்கப்போவதாக அறிவிக்கும் வரை, சீனாவின் பொருளியல் சூடுபிடிப்பதற்கான அறிகுறிகள் தெரியவரும் வரை, கச்சா எண்ணெய் விலை உயரும் வரை ரிங்கிட் பலவீனமாகவே இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மேபேங்க் வங்கியின் தலைமைப் பங்குச் சந்தை உத்தித்துறை வல்லுநர் சக்தியாண்டி சுப்பாட் கூறினார்.

குறிப்புச் சொற்கள்