தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உள்நோக்கி வெடித்த நீர்மூழ்கிக் கப்பல்: மாண்டோருக்குக் குவியும் இரங்கல்

2 mins read
835ff698-8f3e-4464-8f44-ccc48b9ce93c
(இடமிருந்து) கப்பலில் இருந்த ஹமீஷ் ஹார்டிங், ஸ்டாக்டன் ரஷ், ஷாஹ்ஸாடா தாவுத், அவரது மகன் சுலிமான், பால்-ஹென்ரி நார்கியோலெ. - படம்: ஏஎஃப்பி

உள்நோக்கி வெடித்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஸ்டாக்டன் ரஷ் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தவர் என்று அவரின் நண்பரும் முன்னாள் வர்த்தகப் பங்காளியுமாக இருந்த ஒருவர் கூறியுள்ளார்.

திரு ரஷ்ஷின் ஓஷன்கேட் நிறுவனம் பாதுகாப்பு எச்சரிக்கைகளைக் கருத்தில்கொள்ளவில்லை என்று ‘டைட்டானிக்’ திரைப்படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரன் கூறியிருந்தார். உள்நோக்கி வெடித்த நீர்மூழ்கிக் கப்பலை ஓஷன்கேட் நிறுவனம் இயக்கியது.

கப்பல் சிதைவுகளைக் காண்பதற்கான சுற்றுலாக்களை அந்நிறுவனம் வழங்குகிறது. டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காண கடலுக்குள் சென்றபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

அதையடுத்து இந்த டைட்டன் ரக நீர்மூழ்கிக் கப்பல் தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

எனினும், இச்சம்பவத்தில் மாண்ட திரு ரஷ், கவனக்குறைவுடன் செயல்பட்டவர் அல்ல என்று திரு குவியர்மோ சோன்லீன் எடுத்துரைத்துள்ளார். 2009ஆம் ஆண்டில் இருவரும் ஓஷன்கேட் எக்ஸ்படிஷன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினர்.

திரு ரஷ், இறக்கும்போது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காண்பதற்காக சுற்றுலா பயணம் மேற்கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் வியாழக்கிழமையன்று காணப்பட்டன. 61 வயது திரு ரஷ் உட்பட கப்பலில் இருந்த ஐவரும் மாண்டுவிட்டதை அமெரிக்க கடலோரக் காவல்படை உறுதிப்படுத்தியது.

58 வயது பிரிட்டிஷ் செல்வந்தர் ஹமீஷ் ஹார்டிங், நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குபவரான 77 வயது பிரான்சின் பால்-ஹென்ரி நார்கியோலெ, பிரிட்டனில் பிறந்த பாகிஸ்தானியச் செல்வந்தரான 48 வயது ஷாஹ்ஸாடா தாவுத் மற்றும் அவரது 19 வயது மகன் சுலிமான் ஆகியோரும் கப்பலில் இருந்தனர்.

திரு ரஷ்ஷின் மனைவி வெண்டி ரஷ், டைட்டானிக்கில் இருந்த இருவரின் உறவினர் ஆவார். திருவாட்டி வெண்டி ரஷ், டைட்டானிக் கப்பல் விபத்தில் மாண்ட சில்லறை வர்த்தகச் செல்வந்தர் இசிடோர் ஸ்ட்ராவ்ஸ், அவரின் மனைவி ஐடா ஆகியோரின் கொள்ளுப் பேத்தி.

நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் கனடியக் கப்பல் ஒன்றிலிருந்து அனுப்பப்பட்ட தானியக்க வாகனத்தின் மூலம் வியாழக்கிழமையன்று கண்டறியப்பட்டன. டைட்டானிக் கப்பலின் ஒரு பகுதி இருக்கும் இடத்திலிருந்து சுமார் 488 மீட்டர் தொலைவில் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் இருந்தன.

மாண்டோருக்கு உலகளவில் பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான், பிரிட்டன் ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டன. ‘எக்ஸ்புளோரர்ஸ் கிளப்’ என்றழைக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு அமைப்பும் வருத்தம் தெரிவித்துக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்