பாரிஸ்: வரும் 2050ஆம் ஆண்டுக்குள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்குக்கு மேல் உயரும் என்று புதிய ஆய்வு கணித்துள்ளது.
அப்போது, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 1.3 பில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு இனவாதமும் நாடுகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வும் முக்கியக் காரணங்களாக இருக்கும் என அந்த ஆய்வு குறிப்பிட்டது.
உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் நாட்பட்ட நோயான நீரிழிவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்று அந்த விரிவானப் பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கை ‘லான்செட்’ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.
“இப்போது ஏறத்தாழ 529 மில்லியன் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் மக்களின் இறப்புக்கும் அவர்களுக்கு ஏற்படும் உடல்குறைபாட்டுக்கும் முதல் பத்துக் காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது. 95 விழுக்காடு மக்கள் ‘டைப் 2’ நீரிழிவு நோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை இன்னும் 30 ஆண்டுகளுக்குள் 1.3 பில்லியனை விஞ்சிவிடும்,” என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளின் இறப்புக்கும் அவர்களின் உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கும் காரணமாக இருப்பது அவர்களின் அதிக உடல் எடை. உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, புகை, மது போன்ற பழக்கங்களும் கூட அதற்கு காரணமாகக்கூடும்.
“30 ஆண்டுகளில் பல்வேறு நாட்டு மக்கள் பாரம்பரிய உணவுப் பழக்கங்களிலிருந்து அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு மாறிவிட்டனர். அதாவது, சத்தான பழங்கள், காய்கறிகள், கீரைகளைச் சாப்பிடாமல் அவர்கள் வேறு உணவு பழக்கத்திற்கு மாறியது இதற்கு ஒரு காரணம்,“ என்று சுகாதார அளவீடுகள், மதிப்பீட்டு நிறுவனத்தின் (ஐஎச்எம்இ) தலைமை ஆய்வாளர் லியான் ஓங் ‘ஏஎஃப்பி’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மேலும், நீரிழிவுடன் போராட நீண்டகாலத் திட்டமிடல், முதலீட்டுடன் உலக நாடுகளின் ஒத்துழைப்பும் வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
“உலக நாடுகள் நீரிழிவு பாதிப்பையும் அது மக்களுக்குத் தரும் அச்சுறுத்தலையும் குறைத்து மதிப்பிட்டுவிட்டன. நீரிழிவு இந்த நூற்றாண்டின் ஒரு பெருநோயாக இருக்கும்,” என்று ‘லான்செட்’ சஞ்சிகை ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.