தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செப்டம்பருக்குள் எல்லைப் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு: ஜோகூர் முதல்வர்

1 mins read
25568251-f89b-4e2a-83dc-eb0fdc9a5906
சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான நில எல்லைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வுகாண, ஜோகூர் முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி பலமுறை எல்லைச் சாவடிகளுக்கு நேரில் சென்றதாகக் கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருடனான நில எல்லையில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான பிரச்சினைகளுக்கு செப்டம்பர் மாதத்திற்குள் தீர்வுகாண ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி உறுதியளித்துள்ளார். வர்த்தக, முதலீட்டுக் கருத்தரங்கு ஒன்றில் அவர் உரையாற்றினார்.

ஜோகூர் பாருவில் உள்ள ‘சிஐகியூ’ எனும் சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்தலுக்கான வளாகங்களில் அவ்வாறு நெரிசல் ஏற்படுவதை அவர் சுட்டினார்.

இருப்பினும் அதுதொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர் மேல்விவரம் வெளியிடவில்லை.

சிங்கப்பூருடனான நில எல்லையில் அமைந்திருக்கும் சோதனைச் சாவடிகளில் கூடுதலாக 250 குடிநுழைவு அதிகாரிகளைப் பணியமர்த்தவிருப்பதாக ஜோகூர் மாநில அரசு சென்ற வாரம் அறிவித்திருந்தது.

செப்டம்பர் மாதத்திற்குள் கூடுதல் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று அது கூறியது.

ஜோகூரில் செயல்படும் இரு ‘சிஐகியூ’ வளாகங்களிலும் சேவையை மேம்படுத்தத் தமது அரசாங்கம் கடப்பாடு கொண்டிருக்கிறது என முதல்வர் ஓன் ஹஃபிஸ் கூறியதாக பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது.

“போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண்பதால் ஜோகூரைப் பற்றியும் மலேசியா குறித்தும் மக்கள் கொண்டுள்ள எண்ணத்தை மேம்படுத்த இயலும். மாநிலத்திற்கு அன்றாடம் வருவோரின் வாழ்க்கையையும் மேம்படுத்த முடியும்,” என்று முதல்வர் குறிப்பிட்டார்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் சிக்கல்களுக்குத் தீர்வுகாண இயலும் என்று குடிநுழைவுத் துறையும் உள்துறை அமைச்சும் உறுதிகூறியிருப்பதாக அவர் சொன்னார்.

ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பாலம் உலகின் ஆகப் பரபரப்பான நில எல்லைப் போக்குவரத்து நடைபெறும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அன்றாடம் 300,000 மலேசியர்கள் அதன் வழியாக சிங்கப்பூர் வந்துசெல்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்