கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் அமைச்சர் ஸுரைடா கமருதீன், ‘பிகேஆர்’ எனப்படும் கெஅடிலான் கட்சிக்கு 10 மில்லியன் ரிங்கிட் ($2.88 மில்லியன்) செலுத்த வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் கையொப்பமிட்ட ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை மீறி ஆளுங்கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு அவர் மாறியதை நீதிபதி அக்தார் தாஹிர் சுட்டினார்.
கட்சியின் நலனுக்கு எதிராகச் செயல்படுவோரை அவ்வாறு செய்யாமல் தடுப்பதற்கு இந்த அபராதத் தொகை துணைசெய்யும் என்று நீதிபதி கூறினார்.
‘பிகேஆர்’ கட்சியின் முன்னாள் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த ஸுரைடா, அம்பாங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அதன் தொடர்பில் அவர் கட்சிக்கு 50,000 ரிங்கிட் செலுத்த வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது.
முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதின் அமைச்சரவையில் 2018 முதல் 2020 வரையிலும் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அமைச்சரவையில் 2021 முதல் 2022 வரையிலும் ஸுரைடா பொறுப்பேற்றிருந்தார்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துத் தாம் மேல்முறையீடு செய்யப்போவதாக திருவாட்டி ஸுரைடா கூறினார்.

