சிட்னி: ரஷ்யத் தூதரகம் கட்டுவதற்காகத் தேர்வுசெய்யப்பட்ட இடத்தின் குத்தகையை ஆஸ்திரேலியா அரசு ரத்து செய்தபிறகு ரஷ்ய அதிகாரி ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து பல நாள்கள் தங்கி இருப்பதாக ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது.
மேலும், அவர் உணவு விநியோக சேவையை அந்த இடத்தில் நாடினார் என்றும் அதனை ஆஸ்திரேலிய காவல்துறையினர் பார்த்தனர் என்றும் அவருக்கு தூதரக ரீதியான பாதுகாப்பு உள்ளதால் அவரை அந்த இடத்தில் இருந்து வெளியேற்ற முடியவில்லை என்றும் அச்செய்தி குறிப்பிட்டது.
இது குறித்து வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், “ரஷ்யத் தூதரகம் கட்டுவதற்காகத் தேர்வுசெய்யப்பட்ட இடம் பாதுகாப்பாக உள்ளது,” என்றார் .
“அந்த இடத்தை ஆக்கிரமித்தவரால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. குத்தகை ரத்தானதை அவர் அறியவில்லை. நாட்டின் மதிப்பிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் நாங்கள் ஒன்றிணைந்து பாடுபடுவோம்,” என்று ஆண்டனி அல்பனிஸ் விளக்கினார்.
நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, சீனத் தூதரகத்தையும் ரஷ்யத் தூதரகத்தையும் தலைநகர் கேன்பெராவின் புறநகர்ப் பகுதியிலிருந்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு அருகில் மாற்றுவதைத் தடுக்க இம்மாத முற்பகுதியில் ஆஸ்திரேலிய அரசு சட்டம் ஒன்றை இயற்றியது குறிப்பிடத்தக்கது.