தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நிலவையும் தாண்டி விரிவடைகிறது அமெரிக்க-இந்திய இருதரப்பு உறவு’

2 mins read
f8c01539-ad82-4f35-8cfe-10cf6884a308
வாஷிங்டன் வெள்ளைமாளிகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் பைடன் ஜூன் 22 ஆம் தேதி அதிகாரபூர்வ விருந்து அளித்துச் சிறப்பித்தார். அதற்காக அமெரிக்க அதிபர் தம்பதிக்குப் பிரதமர் மோடி நன்றி கூறினார். - ஏஎஃப்பி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் இரு நாடுகளுக்கு இடைப்பட்ட உறவை வரலாறு காணாத அளவுக்கு அணுக்கமாக்கி இருக்கிறது.

அதேவேளையில், இரு நாட்டு உறவு இதுவரை வரலாறு காணாத அளவுக்கு ஆற்றல்மிக்கதாக ஆகி இருக்கிறது. வலுவானதாக, அணுக்கமிக்கதாக விரிவடைந்து உள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்தச் சந்திப்பு, முன்னதாக திட்டமிடப்பட்டதைவிட அதிக நேரம் நடந்தது. அதற்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.

திரு மோடி இம்மாதம் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் மிக முக்கிய உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.

தற்காப்பு, புதிய தொழில்நுட்பங்கள், சுகாதாரம், எரிசக்தி, போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளிலும் இரு நாட்டு ஒத்துழைப்பு வலுவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனமும் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனமும் சேர்ந்து இந்தியாவில் ஜெட் விமான இயந்திரங்களை உருவாக்க ஏதுவாக ஓர் ஊடன்பாடு கையெழுத்தானது.

வரும் 2025ஆம் ஆண்டில் நிலவுக்கும் பிறகு செவ்வாய்க்கிரகத்திற்கும் அதற்கு அப்பாலும் மனிதர்களை அனுப்பும் அமெரிக்காவின் முயற்சியில் இந்தியா சேர்ந்துகொண்டுள்ளது.

இந்த உடன்பாட்டின்படி இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் அடுத்த ஆண்டில் அனைத்துலக ஆகாய நிலையத்திற்குச் செல்வார் என்று அமெரிக்க அதிபர் அறிவித்தார்.

கணினிச் சில்லு தயாரிப்பிலும் இரு தரப்பும் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றிகரமான ஒன்று என்று வர்ணிக்கப்படுகிறது.

அவரின் உரையைச் செவிமடுத்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், எழுந்து நின்று கைதட்டி அதை வரவேற்றனர்.

இரு தலைவர்களும் சந்தித்ததற்கு முன்னதாக அரிதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், ஜனநாயகம் என்பது இந்தியா-அமெரிக்கா நாடுகளின் ரத்தத்தில் காணப்படும் ஒன்று என்று வர்ணித்தார். ஆகையால் ஜனநாயகத்தில் பாரபட்சம் என்ற கேள்விக்கே இடமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

உக்ரேன் போர் பற்றி விவாதிக்க தலைவர்கள், அமைதியை மீட்க எந்த வழியிலும் பாடுபட தாங்கள் தயார் என்று பிறகு தெரிவித்தனர்.

இந்தியப் பிரதமரை வரவேற்று உபசரித்த அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் திரு மோடிக்கு விருந்து அளித்துச் சிறப்பித்தார். இரு தலைவர்களும் மதுபானம் அருந்தாதவர்கள்.

ஆகையால் அந்த விருந்தில் மதுபானம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்