ஹாங்காங்: தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் கேத்தே பசிபிக் சிஎக்ஸ்880 விமானச் சேவை சனிக்கிழமை காலை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதில் இருந்தவர்களில் 11 பேருக்குக் காயம் ஏற்பட்டதாக கேத்தே தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கில் இருந்து லாஸ் ஏஞ்சலிசுக்கு செல்லவிருந்த அந்த விமானத்தில் 293 பயணிகளும் 17 பணியாளர்களும் இருந்தனர்.
தொழில்நுட்பப் பிரச்சினை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து விமானப் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தில் இருந்தவர்கள் அவசர வெளிவாயில் வழியாக வெளியேற்றப்பட்டபோது சிலருக்குக் காயம் ஏற்பட்டதாக கேத்தே கூறியது.
சிகிச்சை தேவைப்பட்ட பயணிகளுடன் விமான நிறுவன ஊழியர்கள் மருத்துவமனைக்குச் சென்றனர்.
“பதினொரு பயணிகளில் ஒன்பது பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிவிட்டனர்.
“எஞ்சிய இரு பயணிகளுக்குக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் எங்கள் ஊழியர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவர்,” என்று கேத்தே சொன்னது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தங்குமிட வசதிக்கு கேத்தே பசிபிக் நிறுவனம் ஏற்பாடு செய்தது. லாஸ் ஏஞ்சலிசுக்கு அந்தப் பயணிகளை ஏற்றிச்செல்ல உள்ள வேறொரு விமானம், சனிக்கிழமை காலை 10 மணிக்குப் புறப்படவிருந்ததாக கேத்தே பசிபிக் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
லாஸ் ஏஞ்சலிசை சென்றடைந்தவுடன் வேறொரு விமானச் சேவைக்கு மாறவேண்டிய பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட கேத்தே, இதுகுறித்த விசாரணைக்காக அதிகாரிகளுக்கு தான் ஒத்துழைப்பதாக கூறியது.