பாகோ: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு குறைந்திருப்பதால் பொருள்களின் விலை அதிகரித்திருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் கட்சியின் தலைவரும் முன்னாள் மலேசியப் பிரதமருமான முகைதீன் யாசின் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளார்.
“பிற நாடுகளின் நாணயங்களுடைய மதிப்பு அதிகரித்து வருகின்றன. ஆனால் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு குறைந்து வருகிறது. இதனால் மலேசியாவில் பொருள்களின் விலை ஏற்றம் கண்டுள்ளது. உதாரணத்துக்கு ஒரு கிலோ இறைச்சியின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது,” என்று திரு முகைதீன் கூறினார்.
ஜோகூர் மாநிலத்தின் பாகோ தொகுதியில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கிராமங்களுக்கு 52 பசுமாடுகளை அவர் நேற்று வழங்கினார். திரு முகைதீன் பாகோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் தலைமையின்கீழ் செயல்பட்டு வரும் ஒற்றுமை அரசாங்கம் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஆட்சி செய்து வரும்போதிலும் மலேசியர்களுக்கு உதவும் வகையில் எவ்வித மேம்பாட்டுத் திட்டங்களும் நடப்புக்குக் கொண்டு வரப்படவில்லை என்றார் திரு முகைதீன்.
மலேசியர்கள் தொடர்ந்து பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மலேசிய அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்,