சிட்னி: மலேசிய ஏர்லைன்ஸ் MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் தொடர்பில் மூன்று ஆடவர்களுக்கு ஆஸ்திரேலியா பொருளியல் தடை விதித்து உள்ளது.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் நேற்று இதனை தெரிவித்தார்.
அந்த விமானம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் உக்ரேன் வான்வெளியில் பறந்துகொண்டு இருந்தபோது ரஷ்ய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
2014 ஜூலை 17ஆம் தேதி ஆம்ஸ்டெர்டாம் நகரிலிருந்து கோலாலம்பூருக்கு MH17 விமானம் சென்றுகொண்டு இருந்தபோது அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணிகளும் விமான ஊழியர்களுமாக 298 பேர் இருந்தனர். அவர்கள் அத்தனை பேரும் உயிரிழந்துவிட்டனர்.
மாண்டோரில் டச்சு குடிமகன்கள் 196 பேரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 38 பேரும் அடங்குவர்.
கடந்த நவம்பர் மாதம் முன்னாள் ரஷ்ய உளவுத்துறை முகவர்கள் இருவருக்கும் உக்ரேனிய பிரிவினைவாதத் தலைவருக்கும் டச்சு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவும் ஏற்கெனவே இகோ கிர்கின் என்னும் ஆடவருக்கு தண்டனை வழங்கியதாக திருவாட்டி வோங் தெரிவித்தார்.