கியவ்: உக்ரேன் மீது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை சனிக்கிழமை காலை ரஷ்யா தொடங்கியது. இதனால் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்திய நகரான டனிப்ரோவில் பல்வேறு வீடுகள் முற்றிலுமாக சேதமுற்றதாக மேயர் போரிஸ் ஃபிலோட்டவ் தெரிவித்தார்.
தலைநகர் கியவ்வை சுற்றியுள்ள வான்வெளியில் 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைக் கண்டறிந்து ஆகாயத் தற்காப்பு அழித்துவிட்டதாக கியவ் ராணுவ நிர்வாகத் தலைவர் செர்ஜியே போப்கோ சொன்னார்.
இருபத்து நான்கு மாடி கட்டடம் ஒன்றில் 16வது, 17வது, 18வது தளங்களில் சிதைகள் விழுந்ததன் காரணமாக தீ மூண்டதாக அவர் கூறினார். இதில் ஏழு பேர் காயமுற்றதாகவும் பக்கத்தில் இருந்த ஏறக்குறைய 40 கார்கள் சேதமுற்றதாகவும் அவர் சொன்னார்.
அந்தக் கட்டடத்தின் மேல்மாடிகளில் தீப்பற்றியதை சமூக ஊடகங்களில் வலம் வந்த படங்கள் காட்டின.
இந்நிலையில், உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வை குறைந்தது மூன்று ரஷ்ய ஏவுகணைகள் குறிவைத்ததாக மேயர் இஹோர் டெரேக்கோவ் தெரிவித்தார். அவசர சேவைகள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகக் குறிப்பிட்ட அவர், உயிர்ச்சேதம் பற்றி மேல்விவரம் தரவில்லை.
மற்ற நகர்களில் வெடிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானாலும் உயிர்ச்சேதம் அல்லது சேதம் குறித்து தகவல் இல்லை.


