பேங்காக்: தாய்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு கணிசமாகக் குறைந்துள்ள வேளையில், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையும் சரிந்துள்ளதாக கல்வி நிபுணர் ஒருவர் கூறினார்.
பெரும்பாலான தாய்லாந்து பல்கலைக்கழகங்களால் மாணவர் சேர்க்கை இலக்கை பூர்த்திசெய்ய முடியவில்லை என்று திரு ஆர்னண்ட் சக்வோராவிச் தெரிவித்தார்.
அரசாங்க, தனியார் பல்கலைக்கழகங்கள் பலவும் மூன்று முதல் ஐந்து மாணவர் சேர்க்கை அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்தும் அனைத்து இடங்களையும் நிரப்ப அவை திணறுவதாக திரு ஆர்னண்ட் குறிப்பிட்டார்.
தாய்லாந்தில் தற்போதைய உயர் கல்விச் சந்தை சற்று சிறிதாக உள்ளது. 200 முதல் 300 பல்கலைக்கழகங்கள் தங்களது ஆண்டுக் கொள்ளளவைவிடக் குறைவான மாணவர்களையே சேர்த்துக்கொள்கின்றன.
மேலும், தாய்லாந்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறைந்து வந்துள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தாய்லாந்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தை பிறப்பு பதிவானது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 500,000 முதல் 600,000ஆகக் குறைந்துள்ளது.
தாய்லாந்தில் 2021ல் 544,000 குழந்தைகள் பிறந்தன. கடந்த 60 ஆண்டுகளில் ஆகக் குறைவான எண்ணிக்கை இது.
2005ல் தாய்லாந்து மூப்படைந்து வரும் சமூகமாகத் தொடங்கியது. ஏறக்குறைய 70 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தாய்லாந்தில் மூத்தோர் எண்ணிக்கை 12.1 மில்லியனை எட்டியதை (18.3%) 2022ல் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் காட்டின.
தொடர்புடைய செய்திகள்
மூப்படைந்த சமூகத்தைப் பொறுத்தமட்டில், ஜப்பானின் நிலையை 2027க்குள் தாய்லாந்து எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மொத்த மக்கள்தொகையில் மூத்தோர் எண்ணிக்கை 28 விழுக்காடாக பங்கு வகிக்கும்.
இந்நிலையில், தாய்லாந்து பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவது, ஒட்டுமொத்த தாய்லாந்து கல்வி முறைக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திரு ஆர்னண்ட் குறிப்பிட்டார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்க, தனியார் பல்கலைக்கழகங்கள் தாக்குப்பிடிக்க சிரமப்படக்கூடும் என்று சொன்ன அவர், இதனால் பல்கலைக்கழகங்கள் ஒன்றுசேர்க்கப்படலாம் அல்லது மூடப்படலாம் என்றார்.


