‘சிங்கப்பூரர்களுக்கு சலுகை விலையில் பெட்ரோல் விற்றதற்கான ஆதாரம் இல்லை’

‘சிங்கப்பூரர்களுக்கு சலுகை விலையில் பெட்ரோல் விற்றதற்கான ஆதாரம் இல்லை’

2 mins read
சமூக ஊடகங்களில் பரவிய காணொளி குறித்து மலேசியக் காவல்துறை
a33e39eb-1ebc-43aa-a406-fc7a3646fbfc
அரசாங்க மானியத்துடன் கூடிய RON95 ரக பெட்ரோல், மலேசியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இஸ்கந்தர் புத்தேரி: ஜோகூரில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் சலுகை விலையில் RON95 ரக பெட்ரோலை சிங்கப்பூரர்கள் இருவர் வாங்கியதற்கான ஆதாரம் இல்லை என்று மலேசியக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிராப் உணவு விநியோக ஓட்டுநருடன் அந்த சிங்கப்பூரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காடும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.

அந்த பெட்ரோல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கருவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சு விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்தது.

“அந்த ஆடவர்களிடம் RON95 ரக பெட்ரோல் விற்கப்பட்டதற்கான ஆதாரத்தை அமைச்சு கண்டறியவில்லை,” என்று இஸ்கந்தர் புத்தேரி காவல்துறைத் தலைவர் ரஹ்மாட் அரிஃபின் கூறினார்.

எனினும், அந்த இருவரையும் காவல்துறையினர் இன்னும் தேடி வருவதாகவும் ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரக அலவலகத்திடம் இருந்து உதவி கோரியுள்ளதாகவும் உதவி ஆணையர் ரஹ்மாட் தெரிவித்தார்.

குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் சட்டப் பிரிவு 506ன்கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூர் காவல்துறையின் உதவியுடன் அந்த இரு ஆடவர்களை மலேசியக் காவல்துறை தேடி வருவதாக உதவி ஆணையர் ரஹ்மாட் முன்னதாகக் கூறியிருந்தார்.

ஆனால், அந்த சிங்கப்பூரர்கள் குறித்து மலேசியக் காவல்துறையிடம் இருந்து தன்னிடம் எந்தவித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சிங்கப்பூர் காவல்துறை வெள்ளிக்கிழமை கூறியது.

கிராப் உணவு விநியோக ஓட்டுநருக்கும் இரு ஆடவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைக் காட்டும் காணொளி ஒன்று ஜூன் 16ஆம் தேதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

சலுகை விலை RON95 ரக பெட்ரோலை வாங்கி கொள்கலன் ஒன்றில் நிரப்பியதற்காக அந்த இருவரையும் கிராப் ஓட்டுநர் கண்டித்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் மூண்டது.

குறிப்புச் சொற்கள்