பெட்டாலிங் ஜெயா: மாணவி ஒருவரிடம் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நேற்று முன்தினம் பேசிய விதம் முறையற்றது என்றும் பெண்களுக்கு மதிப்பு கொடுக்காத வகையில் இருந்ததாகவும் பெர்சத்து கட்சியின் சட்ட, அரசியலமைப்புப் பிரிவுத் துணைத் தலைவர் ஷாஷா லைனா அப்துல் லத்திஃப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 75 வயது திரு அன்வார் கலந்துகொண்டார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 18 வயது மாணவி, ரிங்கிட்டின் மதிப்பு குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டி அதை எதிர்கொள்ள மலேசிய அரசாங்கம் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமல்லாது, மலேசியாவால் வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் இடம்பெற முடியுமா என்றும் அவ்வாறு ஒரு நிலை ஏற்பட அரசாங்கமும் இளையத் தலைமுறையும் என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் அன்வாரைப் பார்த்து அவர் கேள்வி கேட்டார்.
அந்த மாணவி மிகச் சிறந்த, பாராட்டுக்குரிய வகையில் தம்மிடம் கேள்வி கேட்டதாக திரு அன்வார் பாராட்டியதாக திருவாட்டி ஷாஷா லைனா தெரிவித்தார். ஆனால் அடுத்து திரு அன்வார் கூறியதுதான் சர்ச்சைக்குரிய வகையில், முறையற்றதாக இருந்ததாக அவர் கூறினார்.
தாம் இளையராக இருந்திருந்தால் உனது கைப்பேசி எண்ணைக் கேட்டுப் பெற்றிருப்பேன் என்று திரு அன்வார் அந்த மாணவியடம் கூறியதாக திருவாட்டி ஷாஷா கூறினார். இது முறையில்லாத செயல் என்றார் அவர்.
திரு அன்வார் அந்த மாணவியடம் அவ்வாறு கூறியதும், மாணிவியின் கைப்பேசி எண் கிடைத்ததும் அதை என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று பிரதமர் அன்வாரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறியதாக திருவாட்டி ஷாஷா லைனா தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“அந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. எந்த ஒரு சூழ்நிலையிலும் திரு அன்வார் அந்த மாணவியடம் அவ்வாறு பேசியிருக்கக்கூடாது. அவர் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சி தரும் வகையில் இருந்தது.
“நாட்டின் இளையர்களுக்கு அவர் நல்ல உதாரணமாக இருக்கவில்லை. பெண்களின் அறிவுத்திறனைப் புறக்கணித்துவிட்டு அவர்களைப் போகப் பொருளாகப் பார்க்கலாம் என்பது திரு அன்வாரின் நிலைப்பாடா?
“இதுகுறித்து பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி, ஒற்றுமை அரசாங்கம் ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் பெண்கள் மௌனம் காக்கக்கூடாது. அவர்கள் பெண்களுக்காக நியாயம் கேட்டு குரல் எழுப்ப வேண்டும். இல்லாவிடில், அவர்கள் உண்மையானவர்களாக இருக்கவே முடியாது,” என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் திருவாட்டி ஷாஷா லைனா.
அப்பெண்ணிடம் முறையற்ற வகையில் பேசியதை திரு அன்வார் ஒப்புக்கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறினார்.

