தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்னர் கிளர்ச்சிப் படை பின்வாங்கியது; ரஷ்யாவுக்கு நிம்மதி

2 mins read
430ce241-b8cf-4257-9e28-5414729a92a3
வாக்னர் துணைப் படைத் தலைவர் யேவ்ஜெனி பிரிகோஸின். - ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் துணைப் படையின் தலைவர் பிரிகோஸின் ரஷ்யாவில் இருந்து வெளியேற இருப்பதாகவும் அவ்வாறு வெளியேறினால் அவர் மீது எந்த ஒரு குற்றமும் சுமத்தப்படாது என்றும் மாஸ்கோ தெரிவித்து உள்ளது.

அவர் பெலருஸ் செல்ல இருப்பதாக ஆக அண்மையத் தகவல்கள் வெளிவந்து உள்ளன.

இதன் மூலம் ரஷ்யாவுக்கு எதிராக திடீரென்று உருவான பெரும் பிரச்சினை தீரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

உக்ரேனில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் போரில் ரஷ்யாவுக்கு உறுதுணையாக களத்தில் நின்ற ரஷ்ய ஆதரவு துணைப்படையான ‘வாக்னர்’ திடீரென ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியது.

ஜூன்23 அன்று இரவு அந்தப்படையினர் உக்ரேன் எல்லையைக் கடந்து ரஷ்யாவுக்குள் நுழைந்து ரோஸ்டோவ்-ஆன் -டான் நகருக்குள் புகுந்ததாக செய்திகள் வெளியாயின.

அந்த நகரில் உள்ள ரஷ்யாவின் தெற்கு வட்டார ராணுவத் தலைமை அலுவலகத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக பிரிகோஸின் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் வாக்னர் படையினர் ரஷ்யாவுக்குத் துரோகம் இழைத்து விட்டதாகவும் ரஷ்யாவின் முதுகில் குத்திவிட்டதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தமது தொலைக்காட்சி உரையில் மிகவும் காட்டமாகப் பேசினார்.

இந்தத் துரோகச் செயலைத் துடைத்து ஒழிக்கப்போவதாகவும் அவர் சூளுரைத்து இருந்தார். இந்நிலையில், கிளர்ச்சிப் படைத் தலைவரான பிரிகோஸின் தமது படையினரைத் திரும்பப் பெற்று திரு புட்டினுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஞாயிறு காலை ரோஸ்டோவ்-ஆன் -டான் நகரில் இருந்த தமது படையையும் ஆயுதங்களையும் அவர் வெளியேற்றினார்.

வெளியேறுவதற்கு சற்று முன்னர், அந்தப் படையினரை வாழ்த்தும் விதமாக ராணுவத் தலைமையகத்திற்கு வெளியே திரண்டிருந்த சில குடியிருப்பாளர்கள் ‘வாக்னர்! வாக்னர்’ என்று உரக்க முழக்கமிட்டனர்.

பின்னர் கிரெம்ளின் மாளிகைப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் பேசினார்.

“பிரிகோஸின் தாமாகவே பெலருஸ் செல்வார். அவருக்கு எதிரான குற்ற வழக்கு ரத்து செய்யப்படும்,” என்று அவர் கூறினார். அதேபோல கலகத்தில் ஈடுபட்ட வாக்னர் படையினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்