தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஷ்ய குழப்பத்தால் உக்ரேனுக்கு பலன்

1 mins read
dc24e580-d578-4276-9ddb-1eb72fe0613e
ரஷ்யாவின் தெற்கு வட்டார ராணுவத் தலைமையகத்தில் இருந்து வெளியேறும் வேக்னர் படையினர். - ராய்ட்டர்ஸ்

கியவ்: ரஷ்யாவில் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பம் உக்ரேனுக்குப் பலனளித்துள்ளதாக உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இருப்பினும் இந்த வாய்ப்பை உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியும் அவரது ராணுவமும் பயன்படுத்திக்கொண்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

வேக்னர் ராணுவப் படையை நிறுவிய யேவ்ஜெனி பிரிகோஸின் சனிக்கிழமை பின்னிரவு தமது நீதிக்கான போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.

குற்ற வழக்குகளில் தானும் தமது படையினரும் சிக்காமல் தவிர்க்க போராட்டத்தைக் கைவிட நேரிட்டதாக அவர் தெரிவித்தார்.

வார இறுதியில் ரஷ்யாவில் நிலவிய இந்தத் திடீர் குழப்பம் குறித்து கருத்து தெரிவித்த திரு ஸெலென்ஸ்கி, “ரஷ்யத் தளபதிகள் எதையும் கட்டுப்படுத்த இயலாமல் திணறுவதை உலகம் உற்று நோக்குகிறது. சொல்வதற்கு எதுவும் இல்லை. ரஷ்யாவில் நிகழ்ந்தது முழுக்க முழுக்க குழப்பம்,” என்றார்.

இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி உக்ரேன் நட்பு நாடுகள் கியவ்வுக்கு அதிக ஆயுதங்களை அனுப்புமாறு அவர் தமது இரவுநேர காணொளியில் வலியுறுத்தினார்.

தொடர்ந்து உக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறியதாக உள்நாட்டு அரசாங்கச் செய்தி நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டது.

“எங்களது எதிரி நாட்டில் நிகழும் எந்தவொரு குழப்பமும் எங்களுக்குச் சாதகமானதே,” என்று அவர் கூறியதாக அந்தத் தகவல் தெரிவித்தது.

பிரிகோஸின் ஏற்படுத்திய உள்நாட்டுக் குழப்பம் 23 ஆண்டு காலமாக ரஷ்யாவின் அசைக்க முடியாத தலைவராக விளங்கும் விளாடிமிர் புட்டினுக்கு சோதனையை ஏற்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்