பேங்காக்: தாய்லாந்தில் குகையில் 12 இளையர்கள் சிக்கிக்கொண்ட சம்பவத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
அந்த 12 பேரில் காற்பந்து விளையாட்டாளர்களும் அவர்களின் பயிற்றுநரும் அடங்குவர். அந்த நினைவைக் கடைப்பிடிக்கும் விதமாக சிங் ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் குகையின் முன்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. குகைக்குள் மாட்டிக்கொண்ட சம்பவத்தோடு தொடர்புடையவர்களின் புகைப்படங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
குகைக்குள் சிக்கியவர்களை மீட்கச் சென்று உயிரிழந்த தாய்லாந்து கடற்படையின் முக்குளிப்பாளர் சாமன் குனான், அப்போதைய சியாங் ராய் மாகாண ஆளுநர் நரோங்சாக் ஒசாடானாகோர்ன், காற்பந்து விளையாட்டாளர் டுவாங்பெட்ச் புரோம்தெப் ஆகியோரின் படங்களும் அதில் இருந்தன.
அவர்களில் முன்னாள் ஆளுநர் நரோங்சாக் ஒசாடானாகோர்னும் காற்பந்து வீரர் டுவாங்பெட்ச் புரோம்தெப்பும் இந்த ஆண்டில் உயிரிழந்தனர். குகையின் முன்பு சில வழிபாடுகளும் நடத்தப்பட்டன.
2018ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களின் நலனுக்காக அப்போது பிரார்த்தனை செய்யப்பட்டது. 39 பௌத்த பிக்குகளோடு காற்பந்து வீரர்களும் அவர்களின் உறவினர்களும் வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.
2018 ஜூன் மாதம் தாய்லாந்தின் ‘வைல்ட் போர்ஸ்’ காற்பந்து அணியினரும் அணியின் பயிற்றுநரும் அந்த குகைக்குள் சிக்கிக்கொண்டனர். தப்பிக்க வழி தெரியாமல் 18 நாள்கள் அந்த 12 பேரும் குகைக்குள் அவதிப்பட்டனர். மிகவும் சிரமமான மீட்புப் பணியில் தாய்லாந்து கடற்படையினர் ஈடுபட்டனர்.
அந்த 18 நாள்களும் உலகமே அதிர்ச்சியுடன் உற்றுநோக்கும் வகையில் கடந்தன.
அதன் பிறகு இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. சில ஆவணங்களும் புத்தகங்களும்கூட வெளியிடப்பட்டன.