சிட்னி: உக்ரேனுக்குக் கூடுதல் கவச வாகனங்களை ஆஸ்திரேலியா வழங்க இருக்கிறது, இதுதொடர்பாக 110 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$99.4 மில்லியன்) பெறுமானமுள்ள புதிய தொகுப்புத் திட்டத்தை அது உக்ரேனுக்கு வழங்குகிறது.
அதில் 70 ராணுவ வாகனங்களும் 28 எம்113 கவச வாகனங்களும் 14 சிறப்பு நடவடிக்கை வாகனங்களும் அடங்கும். ரஷ்யத் தாக்குதலிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள உக்ரேனுக்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அண்டனி ஆல்பினேசி நேற்று தெரிவித்தார்.
“இந்தக் கூடுதல் ஆதரவு மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். ரஷ்யாவின் முறையற்ற செயல், சட்டவிரோத போரை எதிர்த்து உக்ரேனிய மக்கள் மிகுந்த துணிச்சலுடன் அலையெனப் பொங்கி எழுந்துள்ளனர். ஆஸ்திரேலியா வழங்கும் ஆதரவு உக்ரேனிய மக்களுக்குக் கைகொடுக்கும்,” என்று ஆஸ்திரேலியத் தலைநகர் கென்பராவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு அல்பினேசி கூறினார்.
கடந்த வாரயிறுதியில் ரஷ்ய நகரான ரொஸ்டோவை வாக்னர் துணைப் படை கைப்பற்றி குறுகிய நேரத்துக்குத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் அதிகாரத்துக்குச் சவால் விடுக்கும் வகையில் இருந்தது. ஆனால் அப்படை ரொஸ்டோவ் நகரிலிருந்து பின்வாங்கியது.
இந்த நிகழ்வுக்கும் கூடுதல் ஆதரவு வழங்க ஆஸதிரேலியா முன்வந்ததற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று திரு அல்பினேசி தெரிவித்தார்.

