அதீத வெப்ப நிலை உடற்குறையுள்ளோரை அதிகம் பாதிக்கிறது: ஆய்வு

1 mins read
f38903fd-726c-4ce3-893d-900110d87021
கடந்த ஆண்டு வெப்ப அலைகளின் தாக்கத்தால் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 16,000க்கு மேற்பட்டோர் மாண்டனர். - படம் : ராய்ட்டர்ஸ்

மாட்ரிட்: முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் வாட்டி வதைப்பதால் உடற்குறையுள்ளோர் கடுமையாகப் பாதிப்படைகின்றனர் என்றும் அதிகாரிகள் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டும் என்றும் மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பான ‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’ வலியுறுத்தியுள்ளது.

அதிக வெயில் காரணமாக உடற்குறையுள்ளோர் உடலாலும் மனத்தாலும் பாதிக்கப்படுவதோடு மரணத்தையும் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, தனிமையில் விடப்படுவோர் ஆபத்தான வெப்பநிலையைத் தாங்களாகவே சமாளிக்க முற்படும்போது இத்தகைய இன்னல்களை எதிர்கொள்வதாக அவ்வமைப்பு தெரிவித்தது.

உடற்குறையுள்ளோருக்கு வேறு சில மருத்துவப் பிரச்சனைகளும் ஏற்படுவதுண்டு. அதற்காக அவர்கள் உட்கொள்ளும் மருந்துகள், வெப்பத்தின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்கும் அவர்களின் உடல் திறனைப் பாதிக்கிறது. வெயிலுக்குப் பயந்து வீட்டிலேயே இருப்பதால் சமூக ரீதியான தனிமைப்படுத்தலுக்கும் அது வழிவகுக்கும் என்பதை அது சுட்டியது.

நாடுகள் வெப்ப அலை தொடர்பில் நெருக்கடி நேரத் திட்டங்களை உருவாக்கும்போது உடற்குறையுள்ளோரின் தேவைகள் பெரும்பாலும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. அவர்களுக்கு சிறப்புத் திட்டம் ஏதும் உருவாக்கப்படுவதில்லை என்று அவ்வமைப்பு குறிப்பிட்டது.

கடந்த ஆண்டு வெப்ப அலைத் தாக்கத்தால் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 16,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் அவர்களில் உடற்குறையுள்ளோரின் எண்ணிக்கை குறித்த தெளிவான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்