கோலாலம்பூர்: மலேசியக் காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர்மீது, சக ஊழியர்களைத் திட்டியது, மாது ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஆகியவை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
35 வயதான ஷீலா ஷேரன் ஸ்டீவன் குமார் தன்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். குற்றவியல் சட்டப் பிரிவு 506ன்கீழ் மிரட்டல் தொடர்பான குற்றங்களுக்கு ஈராண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்பட்டலாம். ஒருவரின் தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஐந்தாண்டு சிறைத்தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஷீலா, ஜூன் 15ஆம் தேதி தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள கடை ஒன்றில் நண்பகல் நேரத்தில் 69 வயது மாதை மிரட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அதே இடத்தில், 41 வயது ஆடவரின் தன்மானத்திற்கு பங்கம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஷீலா 3,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வேறொரு வழக்கில், ஜூன் 15ஆம் தேதியிலேயே ஆண் காவலர் ஒருவரை மிரட்டி அவமதித்ததாக ஷீலாமீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கின் தொடர்பில் அவர் 2,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இரு வழக்குகளும் ஆகஸ்ட் 7ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.


