ஒற்றுமை காக்க ரஷ்யப் பிரதமர் வேண்டுகோள்

ஒற்றுமை காக்க ரஷ்யப் பிரதமர் வேண்டுகோள்

2 mins read
923016d6-0b2c-4cf6-a7d2-58ad3c538384
குழப்பத்தால் ஏற்பட்ட நிலைமையைச் சரிப்படுத்த மாஸ்கோவுக்கு திங்கட்கிழமை விடுமுறை விடப்பட்டது. - இபிஏ

மாஸ்கோ: ரஷ்யாவின் நிலைத்தன்மைக்கு சோதனை ஏற்பட்டு உள்ளதாகவும் அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு பக்கபலமாக அனைவரும் ஒற்றுமையுடன் இருக்குமாறும் ரஷ்ய மக்களை ரஷ்ய பிரதமர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

வாக்னர் படையினர் ரஷ்யாவில் ஒரு நகரைப் கைப்பற்றி வார இறுதியில் ஏற்படுத்திய குழப்பம் முடிவுக்கு வந்த நிலையில் பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

நீதிக்கான போராட்டம் என்று சனிக்கிழமை களமிறங்கிய வாக்னர் படையின் தலைவர் பிரிகோஸின் ரஷ்ய தற்காப்பு அமைச்சரையும் ராணுவத் தளபதியையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து இருந்தார். இருவரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதால் நீதியை நிலைநாட்ட தாம் போராட்டக் களத்தில் இறங்கி இருப்பதாகவும் பிரிகோஸின் முழக்கமிட்டார்.

இருப்பினும், ஒரே நாளில் அவர் தமது நிலைப்பாட்டில் இருந்து திடீரென்று பின்வாங்கினார். ஆக்கிரமித்த ரஷ்ய நகரிலிருந்த தமது படைகளையும் ஆயுதங்களையும் வெளியேற்றிய அவர், பெலருஸுக்குச் சென்றதாகக் கூறப்பட்டது.

போராட்டத்தைக் கைவிட்டதால் அவருக்கு எதிராக ரஷ்யா எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், தொலைக்காட்சியில் உரையாற்றிய ரஷ்யப் பிரதமர் ரஷ்யாவின் நிலைத்தன்மை சவாலை எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டார்.

“எனவே, நாம் அனைவரும் ஓரணியாக, நமது படைகளின் ஒற்றுமையுடன் அதிபருக்கு ஆதரவு தர வேண்டிய அவசியம் உள்ளது,” என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், நாட்டில் நிலைத்தன்மை நிலவுவதாக ரஷ்யாவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் குழு கூறியுள்ளது. அதேநேரம் தலைநகர் மாஸ்கோவில் பிறப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் விலக்கிக்கொள்ளப்படுவதாக மாஸ்கோ நகர மேயர் செர்ஜி சோபியானின் கூறினார்.

ரஷ்யாவின் நப்பு நாடான சீனா, ரஷ்யாவின் தேசிய நிலைத்தன்மைக்குத் துணை நிற்கப்போவதாகக் கூறி உள்ளது. குழப்பம் நிலவிய நிலையில் ரஷ்யாவின் மூத்த அரசதந்திரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை சீனா சென்றிருந்தார்.

இதற்கிடையே, வார இறுதியில் ஏற்பட்ட குழப்பம் ரஷ்யாவுக்குள் பிளவு இருப்பதை உணர்த்துவதாக உக்ரேனும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் தெரிவித்து உள்ளன.

“ரஷ்யாவின் அரசியல் அமைப்பு பலவீனம் அடைந்து உள்ளது. ராணுவத்தினர் இடையே விரிசல் ஏற்பட்டு உள்ளது,” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டுக் கொள்கை அமைப்பின் தலைவர் ஜோசப் போரெல் கூறியுள்ளார்.

ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பாயெர்போக் கூறுகையில், “உக்ரேன் மீது புட்டின் மேற்கொண்ட படையெடுப்பு இப்போது ரஷ்யாவை அழிக்கிறது. மேற்கத்திய நாடுகள் உக்ரேனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைத் தொடரும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்