தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமான நிலைய ஊழியரை விமான எந்திரம் விழுங்கியது

2 mins read
de921476-0c6a-4e8a-aef4-7e4d9abf34f0
அமெரிக்காவின் டெக்சஸ் விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம் நகர்ந்து சென்றபோது விபத்து நடந்தது. - ஏஎஃப்பி

விமான எந்திரத்திற்குள் சிக்கி டெக்சஸ் விமான நிலைய ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

லாஸ் ஏஞ்சலிஸில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்ட டெல்டா விமானம் டெக்சஸ் மாநிலத்தின் சேன் அண்டோனியோ விமான நிலையத்தில் தரை இறங்கியது.

ஓர் எந்திரம் இயங்கிக்கொண்டு இருந்த நிலையில் பயணிகள் இறங்கும் இடத்தை நோக்கி அந்த விமானம் நகர்ந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த எந்திரத்தின் இயங்கும் விசை அருகில் நின்று இருந்த விமான ஊழியரை உள்ளிழுத்தது. எந்திரத்திற்குள் சிக்கிய அந்த ஊழியர் அங்கேயே உயிரிழந்ததாக தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் ஞாயிற்றுக்கிழமை தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

இந்தச் சம்பவம் குறித்த தகவல்களை தான் சேகரித்து வருவதாகவும் வாரியம் தெரிவித்தது.

டெல்டா விமான நிறுவனம் தனது விமான நிலையப் பணிகளுக்காக யுனிஃபை ஏஷியேஷன் என்னும் நிறுவனத்தைக் குத்தகைக்கு அமர்த்தி உள்ளது. மாண்ட ஊழியர் அந்த குத்தகை நிறுவனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து தாம் ஆழ்ந்த கவலை அடைவதாகத் தெரிவித்த டெல்டா விமான நிறுவனம், இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டது.

இது ஒரு துயரச் சம்பவம் என்று யுனிஃபை ஏஷியேஷன் நிறுவனம் கூறியது. மேலும், இந்தச் சம்பவத்துக்கும் தனது செயல்பாட்டு நடைமுறை, பாதுகாப்பு நடைமுறை மற்றும் கொள்கைகளுக்கும் தொடர்பில்லை என்றும் அந்நிறுவம் தெரிவித்தது.

இதேபோன்ற ஒரு சம்பவம் 2022ஆம் ஆண்டிலும் நிகழ்ந்தது. அதில் தொடர்புடைய பியட்மோன்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இந்த உயிரிழப்புக்காக கடந்த புதன்கிழமை US$15,625 (s$21,100) அபராதம் விதிக்கப்பட்டது.

முறையான பாதுகாப்புப் பயிற்சி மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை சரிவரக் கடைப்பிடிப்பதன் மூலம் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கலாம் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாக அலுவலகம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
விபத்து