துபாய்: இந்தக் கோடைப் பயணப் பருவத்தில் துபாய் அனைத்துலக விமான நிலையம் வழியாகச் செல்லும் பயணிகள் அனைவர்க்கும் இலவசமாகப் பனிக்கூழ் (ஐஸ்கிரீம்) வழங்கி மகிழ்வித்து வருகிறது எமிரேட்ஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம்.
இதற்கென விமான நிலையத்தின் புறப்பாட்டுப் பகுதிகளில் ஆறு பனிக்கூழ் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எந்த ஒரு பயணியும் இலவசப் பனிக்கூழ் பெற்றுச் சுவைக்கலாம்.
இந்தச் சலுகை ஜூலை 16ஆம் தேதிவரை வெள்ளி, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே கிடைக்கும். நால்வகைச் சுவைகளில் இலவசப் பனிக்கூழ் வழங்கப்படுகிறது.
இதனிடையே, ஜூலை மாதம் முழுவதும் எமிரேட்ஸ் விமானம் வழியாக பிரிட்டனிலிருந்து அல்லது பிரிட்டனுக்குப் பயணம் செய்வோருக்கு இலவச ஸ்ட்ராபெரி பழங்களும் வழங்கப்படும் என்று ‘கல்ஃப் நியூஸ்’ செய்தி கூறுகிறது.