டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பிக் பெண்ட் தேசியப் பூங்காவில் மலை ஏறிக்கெண்டு இருந்த பதின்ம வயதுப் பையனும் அவனின் வளர்ப்புத் தந்தையும் வெள்ளிக்கிழமை மாண்டுவிட்டனர்.
வெப்பநிலை 48.3 டிகிரி செல்சியஸைத் தொட்டதே அதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. டெக்சாசில் இதுவரை பதிவான இரண்டாவது ஆக அதிக வெப்ப நிலை அளவாக அது இருந்தது.
அந்த மாநிலத்தில் வெப்ப அனல் வீசுவதாகவும் அது இந்த வாரத்தில் தென்கிழக்கு நோக்கி நகரும் என்றும் முன்னுரைக்கப்பட்டு உள்ளது.
‘இப்போது கடும் வெப்பநிலை வீசுகிறது’ என்று அந்தத் தேசியப் பூங்காவின் அதிகாரிகளில் ஒருவரான தாமஸ் வாண்டென்பெர்க் கூறினார். அந்தப் பூங்கா, மெக்சிகோ-அமெரிக்க எல்லை அருகே அமைந்துள்ளது.
கடும் வெப்பம் காரணமாக அண்மையில் வேறு ஒருவர் அங்கு மாண்டுவிட்டார். டெக்சாசில் அன்றாட வெப்பநிலை அபாயகரமான அளவுக்கு மிக அதிகமாக இருக்கிறது. அண்மையில் அந்த மாநிலத்தின் மின் விநியோகக் கட்டமைப்பு பாதிப்புக்கு உள்ளாகிவிட்டது.
வெப்பத்துடன் காற்றும் சேர்ந்துகொண்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர். முக்கியமாக துல்சா என்ற வட்டாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
பிறகு கடந்த திங்கள்கிழமை பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சாரம் திரும்பியது. வெப்பநிலையும் குறைந்தது. ஆனால் சில நாட்களில் மீண்டும் வெப்பநிலை கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.