மாஸ்கோ: ரஷ்யாவின் கிளர்ச்சிப் படை அரங்கேற்றிய ஒரு நாள் கலகம், ரஷ்ய அரசாங்கத்தை கவிழ்த்துவிடும் நோக்கத்தில் இடம்பெற்றதல்ல என்று அந்தப் படையின் தலைவர் பிரிகோஸின் திங்கள்கிழமை தெரிவித்தார்.
உக்ரேனில் ரஷ்யா நடத்திவரும் போர் செம்மையானதாக, வியூகமானதாக இல்லை என்பதால் அதைத் தாங்கள் எதிர்ப்பதாகவும் அந்த எதிர்ப்பை வெளிப்படுத்தவே தன் படை கிளர்ச்சியில் ஈடுபட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். அந்தக் கிளர்ச்சி கடந்த சனிக்கிழமை முடிவடைந்தது.
ரஷ்யாவில் மிகப் போராற்றல் மிக்க படையாக தன்னுடைய வாக்னர் படை திகழ்கிறது என்று பல முறை கூறி வந்திருக்கும் பிரிகோஸின், மீண்டும் அதை வலியுறுத்திக் கூறினார்.
தங்கள் படை ரஷ்யாவில் மட்டுமன்றி உலகளவில்கூட மிக பலமிக்கது என்று கூறிய அவர், மாஸ்கோ அந்தப் படையை 2022 பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரேனுக்குள் அனுப்பியது, தங்கள் படைகளை அவமானப்படுத்தியது போன்றதாகும் என்றார்.
வாக்னர் படை கிளர்ச்சிக்குப் பிறகு முதன்முதலாக அந்தப் படையின் தலைவர் 11 நிமிட ஒலிப்பதிவில் இந்த விவரங்களைத் தெரிவித்தார். அந்த ஒலிப்பதிவு செய்தி டெலிகிராம் செயலியில் இடம்பெற்றது.
இதனிடையே, இந்த விவகாரம் பற்றி திங்கள்கிழமை தொலைக்காட்சியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், வாக்னர் படையின் ஒரு நாள் கிளர்ச்சியை வேண்டுமென்றே தான் அனுமதித்ததாகத் தெரிவித்தார்.
ரத்தக்களரியைத் தவிர்ப்பதே தனது நோக்கம் என்றார் அதிபர் புட்டின். அந்தக் கிளர்ச்சியின் விளைவாக இப்போது தேசிய ஐக்கியம் பலமடைந்து இருக்கிறது என்றும் ரஷ்ய அதிபர் குறிப்பிட்டார்.
உக்ரேனும் அதனுடைய மேற்கு நட்பு நாடுகளும் சேர்ந்துகொண்டு, சதி செய்து கிளர்ச்சி மூலம் பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டு ரஷ்யர்கள் தங்களுக்கிடையில் கொலைபாதகச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இதுதான் அந்தக் கிளர்ச்சிக்கு காரணம் என்றும் அதிபர் புட்டின் தெரிவித்தார்.
ரத்தக் களரியைத் தவிர்க்கும்படியும் வாக்னர் போராளிகளுக்குப் பொது மன்னிப்பைத் தான் அளித்துவிட்டதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.
நாட்டுப் பற்றை வெளிப்படுத்தியதற்காக ரஷ்யர்களுக்கு அவர் நன்றி கூறினார்.
இதனிடையே, வாக்னர் கிளர்ச்சியில் அமெரிக்காவுக்கோ அதன் நேச நாடுகளுக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திங்கள்கிழமை குறிப்பிட்டார்.
மாஸ்கோவுக்கு எதிராக வெடித்த அந்த ஒரு நாள் கிளர்ச்சிக்குக் காரணம், ரஷ்ய நிர்வாக முறைக்குள் நிலவும் போராட்டங்கள்தான் என்றாரவர்.
‘‘அந்தக் கிளர்ச்சிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை,’’ என்று அது பற்றி முதன்முதலாக கருத்து கூறிய அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.
அதிபரின் இந்தச் செய்தி பல்வேறு அரசதந்திர வழிகள் மூலம் நேரடியாக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புத் துறை பேச்சாளர் ஜான் கிர்பே செய்தியாளர்களிடம் கூறினார்.
அதன் தொடர்பில் ரஷ்யாவிடம் இருந்து என்ன பதில் கிடைத்தது என்பது பற்றி அவர் எதையும் தெரிவிக்கவில்லை.
இவ்வேளையில், அந்த ஒரு நாள் கிளர்ச்சியில் மேற்கத்திய வேவு அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி ரஷ்ய வேவுத்துறை புலன்விசாரணை நடத்தி வருகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோ கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

