தாய்லாந்தின் அடுத்த பிரதமர் நானே என்கிறார் தலைவர் பிட்டா

2 mins read
18d31140-a0e8-4da6-a0f6-5cddd8b70bea
திரு பிட்டாவின் எட்டுக் கட்சிக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 312 இடங்கள் இருக்கின்றன. - படம்: இபிஏ

பேங்காக்: தாய்லாந்தின் அடுத்த பிரதமராகப் பதவி ஏற்க மேலவையில் தனக்குப் போதிய ஆதரவு இருக்கிறது என்று முன்னணி பிரதமர் வேட்பாளர் பிட்டா லிம்ஜாரோன்ராட் உறுதிபட தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை இந்த அறிவிப்பை விடுத்தார்.

‘முன்னோக்கிய முன்னேற்றக் கட்சி’ என்ற கட்சியின் தலைவரான திரு பிட்டா, கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் அட்டகாசமான வெற்றியைப் பெற்றார்.

என்றாலும் அவர் அடுத்த பிரதமராக ஆவாரா என்பது இன்னமும் நிச்சயமாகத் தெரியவில்லை.

ஒன்பது ஆண்டு காலமாக ராணுவ ஆதரவுடன் நடந்துவந்த அரசாங்கத்தை தாய்லாந்து மக்கள் அந்தத் தேர்தல் மூலம் நிராகரித்துவிட்டார்கள்.

திரு பிட்டாவின் எட்டுக் கட்சிக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 312 இடங்கள் இருக்கின்றன.

தாய்லாந்து அரசமைப்புச் சட்டத்தின்படி, திரு பிட்டா பிரதமராக வேண்டுமானால் மன்றத்தின் இரு அவைகளிலும் இருந்து அவருக்குக் குறைந்தபட்சம் 376 வாக்குகள் தேவை. மேலவையில் 250 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர், தாய்லாந்தில் 2014ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ராணுவத்தால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலவையில் எந்த அளவுக்கு உங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்று கேட்டபோது, போதிய ஆதரவு தனக்கு இருப்பதாக திரு பிட்டா உறுதியாகக் கூறினார்.

தாய்லாந்தில் அரச குடும்பத்தை அவதூறு செய்யக்கூடாது என்ற ஒரு கடுமையான சட்டம் நடப்பில் இருந்து வருகிறது. அந்தச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று திரு பிட்டாவின் கட்சி உத்தேசித்து இருக்கிறது.

இதை வைத்துப் பார்க்கையில் திரு பிட்டா போதிய ஆதரவைப் பெறுவாரா என்ற சந்தேகம் கிளம்பி இருக்கிறது.

அமலில் இருந்துவரும் அரச அவமதிப்பு தடுப்புச் சட்டம், அரசியல் எதிரிகளை ஒடுக்க பயன்படுத்தப்படுகிறது என்று திரு பிட்டாவின் கட்சி பிரசாரம் செய்து வருகிறது.

யாராவது அரச குடும்பத்தை அவதூறு செய்தால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க அந்தச் சட்டம் வகை செய்கிறது.

நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஜூலையில் நடக்கிறது.

அதற்கு முன்னதாக திரு பிட்டாவின் கட்சி, இப்போது மேலவை உறுப்பினர்களை அணுகி தனது நிலையை அவர்களிடம் விளக்கி வருகிறது.

தாய்லாந்து நாடாளுமன்றம் ஜூலை 3ஆம் தேதி கூடுகிறது. ஜூலை 13ஆம் தேதி பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்