தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிளந்தானில் குட்டை உடை அணிந்ததற்காக முஸ்லிம் அல்லாத மாதுக்கு அபராதம்

1 mins read
8cff5d77-73ba-4e6e-b8e8-f0c0436b1db2
பெயர் குறிப்பிடப்படாத இந்த மாதுக்கு கோத்தா பாரு மாநகர் மன்றத்தின் நிறுவன, தொழில்துறை வர்த்தக துணைச் சட்டம் 2019ன் பிரிவு 34(2)(பி)-ன்கீழ் அபராதம் விதிக்கப்பட்டது. - படம்: ஃபேஸ்புக்

மலேசியாவின் கிழக்குக் கடற்கரை கிளந்தான் மாநிலத்தில் குட்டை உடை அணிந்து வந்ததற்காக முஸ்லிம் அல்லாத ஒரு மாதுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த அபராதத்தை ரத்து செய்யும்படி மத்திய அமைச்சர் ஒருவர் உள்ளூர் நிர்வாகத்தை வலியுறுத்தும் அளவுக்கு இந்தப் பிரச்சினை சமூக ஊடகத்தில் புயலைக் கிளப்பி இருக்கிறது.

அபராதம் விதிக்கப்பட்ட மாதின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அவர் பெரிய அளவிலான இளஞ்சிவப்பு நிற மேல் சட்டையும் குட்டை கால்சட்டையையும் அணிந்திருந்தார்.

கோத்தா பாரு மாநகர் மன்றம் ஞாயிற்றுக்கிழமை அந்த 35 வயது மாதுக்கு, கண்ணியமில்லாத வகையில் உடை உடுத்தி வந்ததற்காக அபராதம் விதித்தது.

அவர் கோத்தா பாருவில் ஜவுளிக்கடை ஒன்றை வைத்திருக்கிறார். பொது இடங்களில் அந்த மாது குட்டை ஆடையுடன் காணப்பட்டதாக அந்த மன்றத்தின் அமலாக்கத் துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி மன்றத் தலைவர் ரோஸ்னாசில் அமின் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை முதல் ஏழு நாள்களுக்குள் அபராதத்தைச் செலுத்திவிட வேண்டும். இல்லை என்றால் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்க வேண்டி இருக்கும் என்று அந்த மாதிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. அபராதத்தைக் காட்டும் ஆவணத்தை பிடித்தபடி அந்த மாது காணப்படும் படங்கள் சமூக ஊடகத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்