தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட1,000க்கும் மேற்பட்டோர் பிலிப்பீன்சில் மீட்பு

1 mins read
46739ab6-ca7b-437c-ac85-60d49088ec80
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் ஜூன் 27ஆம் தேதி ஒரு வளாகத்தில் காவல்துறை அதிகாரிகள் சுற்றுக்காவலில் ஈடுபட்டனர். முன்னதாக இந்த வளாகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி 1000க்கும் மேற்பட்டோரை மீட்டனர். - படம்: ஏஎஃப்பி

மணிலாவில் இணையவழி சூதாட்டக்கூடத்தில் வேலை பார்க்கத் தோதாக நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் 1,000க்கும் மேற்பட்டோரைத் தாங்கள் மீட்டு இருப்பதாக பிலிப்பீன்ஸ் காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

தலைநகர் மணிலாவில் ஒரு வளாகத்தில் உள்ள கட்டடங்களில் திங்கள்கிழமை இரவு காவல்துறை அதிகாரிகள் திடீர் சோதனைகளை நடத்தினர்.

அந்தச் சோதனையில் மீட்கப்பட்டவர்களில் சீனர், வியட்னாமியர், சிங்கப்பூரர்கள், மலேசியர்களும் அடங்குவர்.

மீட்கப்பட்டவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டில் இணைய சூதாட்டத்தில் உதவியாளர்களாக பணியாற்ற கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது என்று காவல்துறை தெரிவித்தது.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் இணைய மோசடிகள் தொடர்பில் அனைத்துலக அளவில் கவலைகள் கூடி வருகின்றன.

இதனிடையே, மணிலாவில் அதிகாரிகள் சோதனை நடத்திய வளாகத்திற்கு வெளியே இரண்டு காவல்துறை பேருந்துகளும் டிரக் வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்ததைத் தாங்கள் கண்டதாக செவ்வாய்க்கிழமை ஏஎஃப்பி செய்தியாளர்கள் தெரிவித்தனர். கட்டடங்களில் நுழைய அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

“அடிப்படையில் இது ஓர் ஆள்கடத்தல் விவகாரம்,” என்று பிலிப்பீன்ஸ் தேசிய காவல்துறை இணைய மோசடி ஒழிப்புக் குழுமத்தின் பேச்சாளர் திருவாட்டி மிச்செல் சபினோ கூறினார். அனைத்தும் புலன்விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.

பிலிப்பீன்ஸ் அதிகாரிகள், கடந்த மே மாதம் 1,000க்கும் மேற்பட்ட மக்களை மீட்டனர். அவர்கள் ஆசியாவின் பல நாடுகளையும் சேர்ந்தவர்கள். பிலிப்பீன்ஸ் நாட்டுக்குள் கடத்திச் செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டு இணைய மோசடிகளை நடத்தும்படி அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்