அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப தங்களின் சம்பளம் உயர்வதை மலேசியர்கள் காண்பதை உறுதிசெய்யும் கட்டமைப்பு ஒன்று திட்டமிடப்பட்டு வருகிறது என்று மலேசிய பொருளியல் அமைச்சர் ரஃபிஸி ராம்லி கூறியுள்ளார்.
வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிப்பதற்கான பல்வேறு உத்திகளில் இதுவும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இவரின் அமைச்சு மனிதவள அமைச்சுடன் இணைந்து கட்டமைப்பை உருவாக்கி வருகிறது என்றும் மலேசியர்களின் வருமான வளர்ச்சி மேலும் உறுதிப்பாட்டுடன் அனைவரையும் உள்ளடக்கிய வண்ணம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“அனைத்து ஊழியர்களையும் உள்ளடக்கும் வகையில் வருமான வளர்ச்சி தொடர்பில் குறிப்பிட்டதொரு கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் முயற்சி எடுத்திருப்பது இதுவே மலேசிய வரலாற்றில் முதல்முறை.
“தேசிய பொருளியல் செயல் மன்றத்திடம் ஆகஸ்ட் மாதத்தில் படிப்படியான சம்பளக் கொள்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்வழி நாட்டின் தலைமைத்துவத்திடமிருந்து சரியான வழிகாட்டுதல் கிடைக்கும்.
“எதிர்கால மலேசியத் திட்டங்களுக்கான பொருளியல் திட்டமிடுதலில் முக்கியமாகச் சம்பளம், வருமான வளர்ச்சி ஆகியவற்றின் மீது கவனம் இருக்கும்,” என்று அமைச்சர் ரஃபிஸி ஜூன் 28ஆம் தேதியன்று நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையே, விவசாய நோக்கத்துக்காக 400 ஹெக்டர் நிலப்பரப்பில் உத்திப்பூர்வ பங்காளிகளாகச் செயல்படுவதற்குப் பல்வேறு அரசாங்க வேளாண்மை அமைப்புகளைத் தம் அமைச்சு அடையாளம் கண்டிருப்பதாகவும் ரஃபிஸி குறிப்பிட்டார்.
அரசாங்க நிலத்தில் விவசாயம், உணவு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பங்காளிகளாக விண்ணப்பிக்க, தனியார் விவசாய நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவுக்கு மேலும் நீடித்த நிலைத்தன்மையுடைய உணவு விநியோகத்தை உறுதிசெய்ய வேளாண்மை, உணவுத் துறையின் ஆற்றலைப் பெருக்கும் தொடர் முயற்சி இது என்றும் அமைச்சர் ரஃபிஸி சுட்டினார்.
மலேசியாவின் பணவீக்க விகிதம் தொடர்ந்து ஒன்பது மாதங்களாகக் குறைந்து வந்துள்ளதாகத் திரு ரஃபிஸி தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் மலேசியாவின் பணவீக்க விகிதம் 2.8 விழுக்காடாகப் பதிவானது.
ஏப்ரல் மாதத்துக்கான விகிதம் 3.3 விழுக்காடு.

