தைப்பே: தைவானின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் இரண்டு ரஷ்யப் போர்க்கப்பல்களைக் கண்டதாகத் தைவான் தற்காப்பு அமைச்சு கூறியது. அவற்றைக் கண்காணிப்பதற்காக தைவான் தனது சொந்த விமானங்களையும் கப்பல்களையும் அங்கு அனுப்பியது.
அந்த இரண்டு போர்க்கப்பல்களும் தைவானின் கிழக்குக் கடலோரப் பகுதிக்கு வடக்கே சென்றதாகவும், முக்கியத் தைவானிய கடல்துறைத் தளம் அமைந்துள்ள ‘சுவாவ்’ துறைமுக நகரத்தை நோக்கிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கப்பல்களைக் கண்காணிக்க தைவான் ராணுவம் விமானங்களையும் கப்பல்களையும் அங்கு அனுப்பியது. கரைசார்ந்த ஏவுகணை முறைகளையும் அது தயார்நிலையில் வைத்திருந்தது. வேறு எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.
நீண்ட தொலைவிலான கடற்பாதையின் ஒரு பகுதியாகப் பணிகளை மேற்கொள்வதற்கு ரஷ்யப் பசிபிக் கப்பற்படைத் தொகுதியைச் சேர்ந்த சில கப்பல்கள் பிலிப்பீன்ஸ் கடலின் தென்பகுதிக்குள் நுழைந்ததாக ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமையன்று கூறியது.
உக்ரேன்மீது ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்பைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கு எதிராகப் பல்வேறு தடைகளை விதிப்பதில் அமெரிக்காவுடனும் அதன் நட்புநாடுகளுடனும் தைவானும் சேர்ந்துகொண்டுள்ளது.