கோலாலம்பூர்: அடுத்த மாதம் 5ஆம் தேதியிலிருந்து மலேசியாவில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஸலிஹா முஸ்தஃபா நேற்று தெரிவித்தார்.
இருப்பினும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது முகக்கவசம் அணிந்துகொள்வது ஊக்குவிக்கப்படுவதாக அவர் கூறினார்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகள், தனியார் மருந்தகங்கள் போன்ற சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் இருக்கும்போது முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
“மூத்தோர், குறைந்த எதிர்ப்புச்சக்தி உள்ளவர்கள், நாட்பட்ட நோய்களால் அவதியுறுவோர், கர்ப்பிணிகள் போன்ற எளிதில் பாதிப்படையக்கூடியோர் முகக்கவசம் அணிந்துகொள்வது ஊக்குவிக்கப்படுகிறது.
“கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு நோய் பரவுவதை இது தடுக்கும்.
“கடந்த ஐந்து வாரங்களில் மலேசியாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் விகிதம் 53.5 விழுக்காடு சரிந்துள்ளது (5,801லிருந்து 2,698ஆகக் குறைந்துள்ளது). கொவிட்-19 கிருமித்தொற்றால் மாண்டோர் விகிதமும் 35.3 விழுக்காடு குறைந்துள்ளது (17 லிருந்து 11ஆகக் குறைந்துள்ளது),” என்று அமைச்சர் ஸலிஹா கூறினார்.
கொவிட்-19 கிருமிப் பரவலை மலேசிய அரசாங்கம் மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தியிருப்பதாகவும் நாட்டின் சுகாதாரச் சேவையை மீண்டும் வழக்கநிலைக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் ஸலிஹா தெரிவித்தார்.


