‘டயட் கோக்’ இனிப்பூட்டியால் புற்றுநோய் அபாயம் இருப்பதாக அறிவிக்கப்படலாம்

உலகில் ஆகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டிகளில் ஒன்று ஜூலை மாதம் புற்றுநோய்க் காரணியாக அறிவிக்கப்படலாமெனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோக்க கோலா ‘டயட்’ பானங்கள் முதல் மார்ஸ் எக்ஸ்ட்ரா மென்மிட்டாய், சிலவகை ஸ்னாப்பல் பானங்கள் வரை பல்வேறு தயாரிப்புகளில் சேர்க்கப்படும் அஸ்பர்டேம் , மனிதருக்குப் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய பொருளாக ஜூலை மாதம் பட்டியலில் சேர்க்கப்படலாம்.

உலகச் சுகாதார நிறுவனத்தின் அனைத்துலகப் புற்றுநோய் ஆய்வுப் பிரிவு, வெளிதரப்பு வல்லுநர்களைச் சந்தித்த பிறகு ஜூன் மாதம் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அஸ்பர்டேம் இனிப்பூட்டியை எந்த அளவில் உட்கொள்வது பாதுகாப்பானது என்பதைப் புற்றுநோய் ஆய்வுப் பிரிவு கவனத்தில் கொள்வதில்லை. உணவுச் சுவையூட்டிகளை ஆய்வு செய்யும் ஜெக்ஃபா பிரிவும் அஸ்பர்டேம் பயன்பாட்டை இவ்வாண்டு பரிசீலித்து வருகிறது. இரு பிரிவுகளும் ஜூலை 14ம் தேதி இறுதி தீர்மானத்தை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்பர்டேம் அன்றாட வரம்புகளுக்குள் உட்கொள்ளப்பட்டால் பாதுகாப்பானது என்று ஜெக்ஃபா 1981லிருந்து கூறி வருகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பானத்தில் எவ்வளவு அஸ்பர்டேம் உள்ளது என்பதன் அடிப்படையில், 60 கிலோகிராம் எடையுள்ள ஒருவருக்குப் புற்றுநோய் அபாயம் ஏற்பட அவர் தினமும் 12 முதல் 36 டின் டயட் பானம் குடிக்க வேண்டும்.

தவிர்க்கச் சிரமமான பொருள்களை அல்லது சூழ்நிலைகளைப் பற்றி அனைத்துலகப் புற்றுநோய் ஆய்வுப் பிரிவு தேவையின்றி பீதியை எழுப்புவதாக இதற்குமுன் குறை கூறப்பட்டுள்ளது. இரவெல்லாம் வேலை செய்வதும், சிவப்பிறைச்சி உண்பதும், கைப்பேசி பயன்படுத்துவதும் அஸ்பர்டேம் போன்று புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை என இந்த ஆய்வுப் பிரிவு கூறியிருக்கிறது.

“அனைத்துலகப் புற்றுநோய் ஆய்வுப் பிரிவு உணவுப் பாதுகாப்பு அமைப்பல்ல. அஸ்பர்டேம் பற்றிய அவர்களின் ஆய்வு அறிவியல் பூர்வமானதல்ல. பரவலாக ஏற்கப்படாத ஆய்வை அதிகமாகச் சார்ந்தவை,” என்று அனைத்துலக இனிப்பூட்டிகள் சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஃபிரான்சஸ் ஹண்ட்-வூட் கூறினார்.

அஸ்பர்டேம் பற்றி ஆய்வுப் பிரிவு வெளியிடவிருக்கும் அறிவிப்பு பயனீட்டாளர்களுக்குத் தவறாக வழிகாட்டக்கூடும் என்ற கவலை எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அஸ்பர்டேம் பல ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் 100,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, அஸ்பர்டேம் உள்ளிட்ட செயற்கை இனிப்பூட்டிகளை அதிகளவில் உட்கொள்பவர்களுக்குப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் சற்று அதிகம் எனக் கண்டறியப்பட்டது.

அதற்குமுன் இத்தாலியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், எலிகளையும் சுண்டெலிகளையும் பாதித்த சிலவகை புற்றுநோய்களுக்கும் அஸ்பர்டேம் இனிப்பூட்டிக்கும் தொடர்பிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், முதல் ஆய்வில் புற்றுநோய் அபாயத்தை அஸ்பர்டேம் அதிகரிப்பதாக நிரூபிக்கப்படவில்லை. இரண்டாவது ஆய்வின் நடைமுறை பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன.

தற்போது அஸ்பர்டேம் இனிப்பூட்டியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. பெப்சிகோ நிறுவனம் 2015ல் சோடா பானங்களில் அஸ்பர்டேம் சேர்ப்பதை நிறுத்தியது. ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் சேர்த்த பெப்சிகோ, 2020ல் மீண்டும் நிறுத்தியது.

இந்நிலையில், அஸ்பர்டேம் இனிப்பூட்டியை உத்தேசப் புற்றுநோய்க் காரணியாக அறிவிப்பதன்மூலம் மேற்கொண்டு ஆய்வுகளைத் தூண்ட புற்றுநோய் ஆய்வுப் பிரிவு நினைப்பதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த விரும்புவோர் சீனி அல்லாத இனிப்பூட்டிகளைப் பயன்படுத்த வேண்டாமென்று உலகச் சுகாதார நிறுவனம் சென்ற மாதம் ஆலோசனை வெளியிட்டது. ஆனால், உணவில் சீனியைக் குறைக்க விரும்புவோருக்கு இனிப்பூட்டிகள் உதவியாக இருக்கும் என்று உணவுத் தொழில்துறை வாதாடியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!