கனடா கத்திக் குத்து: வெளிநாட்டு மாணவர்மீது குற்றச்சாட்டு

கனடா கத்திக் குத்து: வெளிநாட்டு மாணவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
70c97ceb-22f5-43ed-80a2-9b79be8e28eb
வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. - படம்: வாட்டர்லூ பல்கலைக்கழகம் / ஃபேஸ்புக்

ஒட்டாவா: கனடாவில் பல்கலைக்கழக வளாகத்தில் மூவரைக் கத்தியால் குத்தியதாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் புதன்கிழமையன்று வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்தது. பாலினக் கல்விப் பாடம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சந்தேக நபர் வகுப்பறைக்குள் நுழைந்து ஒரு 38 வயது பேராசிரியரைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இரண்டு பெரிய கத்திகளை வைத்திருந்த சந்தேக நபர், பேராசிரியருடன் சிறிது நேரம் பேசிய பிறகு அவரைத் தாக்கியதாக நம்பப்படுகிறது. தாக்குதலைத் தவிர்க்க சில மாணவர்கள் முயன்றதாகவும் வேறு சிலர் சம்பவ இடத்திலிருந்து ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களில் ஒரு 20 வயது பெண்ணும் ஒரு 19 வயது ஆணும் கத்திக் குத்துக்கு ஆளாயினர்.

மோசமான காயங்கள் ஏற்பட்ட முவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர் மேலும் ஒரு மாணவரையும் கத்தியால் குத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர் சம்பவ இடத்தில் கைதுசெய்யப்பட்டார்.

இது, வெறுப்பின் காரணமாக நடத்தப்பட்ட தாக்குதல் என்று காவல்துறையினர் கூறினர்.

குறிப்புச் சொற்கள்