ஷாங்காய்: சீனாவில் மக்கள்தொகை மூப்புப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
இந்த நிலையில், அந்த நாட்டில் செயல்படும் டிரிப்.காம் குரூப் என்ற ஆகப் பெரிய தனியார் நிறுவனம் ஜூலை முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்னுடைய ஊழியர்களுக்கு, குழந்தை ஒவ்வொன்றுக்கும் 50,000 யுவான் (S$9,300) தரப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
சீனாவில் எந்தவொரு தனியார் நிறுவனமும் இப்படி ஓர் அறிவிப்பை இதுவரை வெளியிட்டதில்லை.
டிரிப்.காம் நிறுவனம் உலகிலேயே ஆகப் பெரிய பயணத்துறை இணைய நிறுவனங்களில் ஒன்றாகும். அதனை 400 மில்லியன் பயனீட்டாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.
உலகம் முழுவதும் பரவி இருக்கும் டிரிப்.காம் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் 10,000 யுவான் ரொக்க மானியம் கொடுக்கப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்தத் திட்டம் காரணமாக அந்த நிறுவனத்துக்கு ஏறக்குறைய 1 பில்லியன் யுவான் ($186 மில்லியன்) செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
“குழந்தைகளுடன் கூடிய குடும்பங்களுக்குக் குறிப்பாக பல பிள்ளைகளைக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் பண உதவி செய்ய வேண்டும். அப்படி செய்தால் இளம் தம்பதியரில் அதிகமானவர்கள் பல குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவார்கள்.
“இதையே நான் எப்போதும் தெரிவித்து வந்திருக்கிறேன்,” என்று டிரிப்.காம் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ஜேம்ஸ் லியாங் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல, குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் வகையில், நிறுவனங்களும் தங்களால் முடிந்த அளவுக்கு உதவலாம் என்றாரவர்.

