தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பற்றி எரிகிறது பிரான்ஸ்; ஆர்ப்பாட்டம் பரவியது

2 mins read
c33f5e75-e862-4765-9d3e-bfa918a92e5f
பாரிஸ் நகருக்கு மேற்கே ஜூன் 27ஆம் தேதி நடந்த வன்செயல் ஆர்ப்பாட்டத்தில் ஒரு கார் தீக்கிரையானது. அதை தீயணைப்பாளர்கள் அணைத்தனர். - படம்: ஏஎஃப்பி 

பாரிஸ்: பிரான்சில் 17 வயது விநியோக வாகன ஓட்டுநரான பதின்ம வயதுப் பையன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் வன்செயல்கள் வியாழக்கிழமை இரவும் தொடர்ந்தன.

ஏறக்குறைய 800 பேர் கைதாகி இருக்கிறார்கள். பாரிசில் இருந்து கலவரம் நாடு முழுவதும் பரவுவதாக தகவல்கள் தெரிவித்தன.

வன்செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடைகளில் புகுந்து பலரும் கொள்ளையடிக்கிறார்கள். பிரான்ஸ் முழுவதும் கிட்டத்தட்ட 40,000 அதிகாரிகள் பணிகளில் பிரித்துவிடப்பட்டு இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவித்தன.

பிரான்ஸ் காவல்துறை அதிகாரி ஒருவர், பாரிஸ் நகரில் பதின்ம வயது விநியோக வாகன ஓட்டி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டார். போக்குவரத்துச் சாலைச் சந்திப்பு ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்தது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்த பதின்ம வயதுப் பையன் பிறகு மாண்டுவிட்டான்.

அதிகாரி ஒருவர் அந்தப் பையனைப் பார்த்து ‘உன் தலைக்குக் குறிவைத்துவிட்டேன்’ என்று கூறியதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரபரப்பை கிளப்பியது.

துப்பாக்கியால் சுட்ட காவல்துறை அதிகாரி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு இருக்கிறார். நோக்கமின்றி கொலை செய்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. இப்போது அந்த அதிகாரி காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோன், புதன்கிழமை இரவு இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதைக் காட்டும் படங்கள் வெளியாயின. இதனையடுத்து, பலரும் அதிபரைக் குறை கூறினர்.

இதனிடையே, வன்முறைச் சம்பவங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளஅதிபர் மெக்ரோன், அப்படிச் செய்வது நியாயமற்றது என்றும் சாடியுள்ளார்.

அதிகமான காவல்துறையினர் சாலைகளில் குவிக்கப்படுவர் என்ற அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்