ஜெனிவா அனைத்துலக விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை பணியாளர்கள் வேலைநிறுத்தில் ஈடுபட்டதால் விமான நிலையப் பணிகள் முடங்கின. இதைத் தொடர்ந்து அந்த விமான நிலையத்தில் 64 பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.
“இங்கு ஏற்பட்ட வேலைநிறுத்தத்தால் பணிகள் காலை 6.00 மணியிலிருந்து 10.00 மணிவரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன,” என்று விமான நிலையம் தகவல் வெளியிட்டது.
இது குறித்து கருத்துக் கூறிய விமான நிலைய பேச்சாளர் ஒருவர், குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனமான ஈசிஜெட்டின் முக்கிய தளமாக விளங்கும் சுவிட்சர்லாந்தின் இரண்டாவது விமான நிலையம் முடங்கியது. இதனால் கிட்டத்தட்ட 8,000 பயணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலைய வாரியம் வியாழக்கிழமையன்று புதிய ஊழியர் வருமான கொள்கையை அறிவித்தது. இதை ஊழியர்கள் ஏற்காததால் வேலைநிறுத்தம் ஏற்பட்டது.
இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை ஏறக்குறைய 6.8 மில்லியன் விமானப் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக ஏஎஃப்பி செய்தி கூறுகிறது.
விமானப் பயணம் தொடர்பாக ஐரோப்பிய விமான நிலையங்களில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட குழப்பநிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதில் விமானப் பயணத் துறை ஆர்வமாக உள்ளது.
கொவிட் கொள்ளைநோய் காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதால் மீண்டும் பயணத் துறை சூடுபிடிக்கத் தொடங்கியதும் இந்தத் துறை தவிப்பில் ஆழ்ந்தது
அவ்வமயம் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது, பயணப் பைகள் இடம் மாறி இருந்தது, விமானப் பயணங்கள் தாமதமாவது போன்ற சிரமங்களை எதிர்நோக்கினர்.